The Talkie
Saturday, April 11, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home கட்டுரைகள் தமிழ்த் திரைப்படங்கள்

திரையிசையில் நாகஸ்வரம்

The Talkie by The Talkie
April 15, 2025
in தமிழ்த் திரைப்படங்கள்
A A
0
thirai isail Nagaswaram
Share on WhatsappShare on FacebookShare on Twitter
Author Icon லலிதா ராம்


தமிழ்த் திரைப்பட வரலாற்றின் முதல் 60-70 வருடங்களை எடுத்துப் பார்த்தால், திரைப்பாடல்களில் வாயசைத்து நடிப்பவருக்கும், பாடலுக்குக் குரல் கொடுப்பவருக்கும், பாடலை இசையமைப்பவருக்கும், பாடலின் வரிகளை எழுதுபவருக்கும் அதற்கான அங்கீகாரம் திரைப்படத்தின் தொடக்கத்தில் காட்டப்படும். பெயர்பட்டியலிலும், பாடல்கள் இசைத்தட்டாகவோ, ஒலிநாடாவாகவோ வெளியாகும் போது அவற்றின் உறைகளில் உள்ள விவரங்களிலும் கிடைத்துவிடும். ஆனால் அந்தப் பாடல்களில் பங்காற்றிய வாத்திய இசைக் கலைஞர்களின் பெயர்கள் பெரும்பாலும் வெளியில் தெரிவதில்லை.

கடந்த 20 ஆண்டுகளில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இணையப் பத்திரிகைகள், சமூக வலைத்தளங்கள் மூலமாகவே பின்னணியில் மட்டுமே இருந்த கலைஞர்களின் மேல் கொஞ்சமாவது வெளிச்சம் விழத் தொடங்கியுள்ளது. இந்த மாறிய சூழலில்கூட திரையிசையில் நாகஸ்வரம் இசைத்த கலைஞர்களின் மேல் கவனம் ஒப்பீட்டளவில் குறைவாகத்தான் விழுந்துள்ளது. 

இந்த முன்குறிப்பை எழுதக் காரணம், இந்தக் கட்டுரை ஓர் முழுமையான ஆய்வின் முடிவில் எழுதப்பட்ட ஒன்றல்ல என்பதைச் சுட்டத்தான். தரவுகள் சரியான முறையில் தொகுக்க பல பேரின் சில வருட தொடர் உழைப்பாவது தேவைப்படும் என்பதால் இந்தக் கட்டுரையில் எண்ணற்ற விடுபடல்கள் நிச்சயம் இருக்கும் என்பதை முன்பே சொல்லிவிடுகிறேன். நாகஸ்வர கலைஞர்களின் மேலும், நாகஸ்வர இசையின் மேலும் ஈடுபாடுள்ள ரசிகனின் ரசனைப் பகிர்வுகளாக இந்த முயற்சியைக் கொள்வது உசிதமென்று நினைக்கிறேன்.

திரைத்துறைக்கு வெளியில் நாகஸ்வர கலைஞர்களாக பெரும் முத்திரைப் பதித்த கலைஞர்கள் திரைப்படத்தில் பங்குபெறும்போது அவர்களுடைய பெயருக்கு அங்கீகாரம் படத்திலேயே கிடைத்துவிடுவதால் – இந்த வகையில் பங்களித்த கலைஞர்களையும், அவர்கள் பங்காற்றியுள்ள இசைத்துணுக்குகளையும் கண்டடைவது ஒப்பீட்டளவில் சுலபம். இந்த வகையில் எனக்குக் கிடைத்த தகவல்களை முதலில் பட்டியலிடுகிறேன்.

நாகஸ்வர ஏகசக்ராதிபதி திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை

நாகஸ்வரம் என்றதும் பெரும்பாலனவர்களின் மனத்தில் முதலில் உதிக்கும் பெயர் ராஜரத்தினம் பிள்ளையினுடையதாகத்தான் இருக்கும். இவருடைய நாகஸ்வர வாசிப்பு இடம்பெற்றுள்ள படம் என்று ஒருசில படங்களைப் பற்றிய (உறுதி செய்ய முடியாத) குறிப்புகள் கிடைக்கின்றன. உதாரணமாக, மிஸ் கமலா என்ற படத்தில் ராஜரத்தினம் பிள்ளை வாசித்த காட்சிகள் உள்ளன என்றொரு குறிப்பு உண்டு. படம் நமக்குக் கிடைக்காததால் இதனை உறுதி செய்ய முடியவில்லை. 

Rajarathnam

எம்.கே.தியாகராஜ பாகவதர் கதாநாயகனாக நடித்த திருநீலகண்டர் படத்தில் ராஜரத்தினம் பிள்ளை வாசிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் ஒரு குறிப்பு உண்டு. அந்தப் படத்தை இணையத்திலேயே இன்று காண முடிகிறது. படத்தில் கோயிலில் நடக்கும் புறப்பாடு காட்சியாக்கப்பட்டு அதில் நாகஸ்வரமும் இடம்பெற்றுள்ளது என்றாலும் அதை வாசித்தவர் நிச்சயம் ராஜரத்தினம் பிள்ளை அன்று என்பதைக் கேட்டமாத்திரத்தில் உணர்ந்து கொள்ளலாம். இப்படத்தில் ராஜரத்தினம் பிள்ளையின் பங்களிப்பைப் பற்றி இன்னொரு செவிவழிச் செய்தியும் உண்டு. படத்தில் ‘பவழமால் வரை’ என்ற திருவிசைப்பா பாடல் ராகமாலிகையாய் இடம்பெற்றுள்ளது. இதன் படப்பிடிப்பின்போது அங்கு இருந்த ராஜரத்தினம் பிள்ளை பைரவி ராகத்தை எப்படியெல்லாம் பாடலாம் என்று தன் பாணியில் விஸ்தரித்ததைக் கேட்டு அதன் வழியில் எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடினார் என்ற செய்தியை உறுதிபடுத்தத் தகுந்த தரவுகள் இல்லை. என்றாலும் அந்த பைரவியில் பாகவதர் அடுக்கடுக்காய்த் தொடுத்திருக்கும் சுருள் சங்கதிகளைக் கேட்கும் போது இந்தச் செய்தியில் உண்மை இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ராஜரத்தினம் பிள்ளை நாகஸ்வரத்தில் நிகரற்ற பெயரைப் பெற்றார் என்றாலும் தன்னை அவர் வாய்ப்பாட்டுக்காரராகவும் கருதிக் கொண்டார். ஒரு பத்திரிகையில் இசைக் கலைஞர்களின் படத்தை வெளியிடும்போது தன்னை வெறும் நாகஸ்வர வித்வான்களுக்கிடையில் அட்டவணைப்படுத்தியிருந்ததால் அந்தப் பத்திரிக்கை அலுவலகத்திற்கே சென்று பெரிய சண்டை போட்டாராம். திருச்சி வானொலி நிலையத்தில் அவர் பாடி சில கச்சேரிகளும் ஒலிபரப்பாகியுள்ளன. இன்றைய அளவில் அவர் பாட்டைக் கேட்க நமக்குக் கொடுத்திருக்கிறதென்றால் அதற்கு திரையுலகிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். 

எல்லிஸ் டங்கன் இயக்கத்தில் 1938-ல் வெளியான காளமேகம் படத்தில் ராஜரத்தினம் பிள்ளை கதாநாயகனாக நடித்தார். காளமேகப் புலவருக்கும் நாகஸ்வரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றாலும், படத்தின் கதாநாயகனைக் கருத்தில் கொண்டு அவர் வீதியில் நாகஸ்வரம் வாசித்து வரும்படி காட்சிகள் வைக்கப்பட்டன என்றும் அக்காட்சிகளில் ஒத்து ஊதும் துணைக் கலைஞராக (கதாநாயகனின் நண்பர் பாத்திரத்தில்) கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்தார் என்றும் ராண்டர் கை எழுதியுள்ள கட்டுரை நமக்குத் தெரிவிக்கிறது. துரதிருஷ்டவசமாய் படம் நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும் சில பாடல் பதிவுகள் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றுள் ’நாணுகின்றேன்’ என்று தொடங்கும் தோடி ராக விருத்தமும் இருப்பது நாம் செய்த பேறு. ராஜரத்தினம் பிள்ளை வாசித்த தோடி, ஆறு நிமிட தோடி ராகப் பதிவு காலகாலமாய் பல தலைமுறை கலைஞர்களின் கற்பனைகளைப் பெருக்கும் கிரியா ஊக்கியாக இருக்கும் பதிவு. எல்லைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட சஞ்சாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் அணிவகுக்கும் அமானுஷ்ய பதிவு என்று எவ்வளவுதான் வார்த்தைகளை இட்டு நிரப்பினாலும் ஈடு சொல்ல முடியாத பதிவது. அந்தப் பதிவில் அவர் கருங்குழலில் சாதித்த அத்தனையையும் தன் குரலிலும் சாதிக்க இயலும் என்று காட்டும் விருத்தம் நமக்கு இன்றும் கிடைப்பதைப் பேறு என்றுதானே சொல்ல முடியும்? இந்தப் பதிவைத் தவிர, இதே படத்தில் டி.என்.ஆர் பாடியுள்ள வேறு சில பாடல் பதிவுகளும் நமக்குக் கேட்கக் கிடைக்கின்றன. காளமேகம் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதன் பாடல்கள்! அதிலும் அந்தத் தோடி! – அது ஏன் ராஜரத்தினம் நாகஸ்வரத்தில் வாசித்த தோடிக்கு ஈடாகக் கொண்டாடப்படுவதில்லை என்பது எனக்கு வியப்பாகவே உள்ளது.

நாகஸ்வர இசைச்செல்வன் காருகுறிச்சி அருணாசலம்

தமிழ்ப்படங்களில் கதாநாயகன் நாகஸ்வரக் கலைஞராக இடம்பெற்ற படங்களில் முதலாவது ‘கொஞ்சும் சலங்கை’ என்றே நினைக்கிறேன். இப்படியொரு கதாநாயகனுக்கு படம் வெளியான சமயத்தில் கலையுலகின் உச்சாணியில் இருந்த காருகுறிச்சி அருணாசலத்தை வாசிக்க வைக்க வேண்டும் என்று படக்குழுவினர் நினைத்திருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

arunachalam

காருகுறிச்சியார் வாசித்துள்ள பந்துவராளி, உசைனி, டக்கா, தோடி காம்போதி போன்ற ராகங்கள் அவரை கர்நாடக இசைச் சூழலில் நிரந்தரமானவராக ஆக்கியுள்ளன என்றாலும் அவரைச் செவ்வியல் இசைப்பக்கம் ஒதுங்காத தமிழ் மனதுக்கும் நெருக்கமானவராய் கொண்டு சென்றது கொஞ்சும் சலங்கைதான். 

இன்றுகூட இசைப் போட்டிகளில் முக்கியமான தருணங்களில் கடினமான பாடலொன்றைப் பாடி விஷயமறிந்தவர்களையும் அறியாதவர்களையும் ஒரு சேர தம் பக்கம் இழுக்கத் தேர்வு செய்யும் பாடல்களுள் முக்கியமான ஒன்றாய் ‘சிங்காரவேலனே தேவா’ இடம்பெற்றுள்ளது. 

இந்தப் பாடல் பதிவில் நிகழ்ந்த அதிசயம் இன்று ஓரளவேனும் அறியப்பட்ட ஒன்றுதான். அறியாதவர்கள் இருக்ககூடும் என்பதற்காக சொல்கிறேன் (அறிந்தாலும் இன்னொருமுறை நினைத்துத் திளைக்ககூடிய நிகழ்வுதானே!), இந்தப் பாடலின் ஆரம்ப திட்டத்திலும் ஒலிப்பதிவிலும் காட்சியமைப்பிலும் – வாய்ப்பாட்டு இல்லை. கச்சேரிகளில் வாசிக்கும் “மந்திரமாவது நீரு” பாடலைத்தான் காருகுறிச்சியார் வாசித்து பதிவு செய்திருக்கிறார். இந்தக் காட்சியை கதாநாயகனும் (ஒரு) கதாநாயகியும் சேர்ந்து இசைக்கும்படி வைக்கலாம் என்பது பின்னால் தோன்றிய யோசனை. இந்த விஷயத்தைப் பாடலைப் பாடிய எஸ்.ஜானகியே ஆனந்த விகடனில் வெளியான கட்டுரை ஒன்றில் பதிவு செய்துள்ளார். 

அவர் வார்த்தைகளில்…

”இந்தப் பாட்டை நானும் காருகுறிச்சி அருணாசலமும் தனித்தனியேதான் பாடினோம் என்று சொன்னால், ஆச்சர்யமாக இருக்கும். முதலில் அவரை நாகஸ்வரத்தில் வாசிக்கச் சொல்லி ’ரெகார்டு’ செய்துகொண்டு விட்டார்கள். பிறகு வேறொரு நாள் நான் அவர் வாசித்தைக் கேட்டுக் கொண்டே (’இயர்போன்’ உதவியால்) அந்தச் சுருதிக்கும், நயத்துக்கும், குழைவிற்கும் ஏற்ப அப்படியே பாடினேன்.”

இன்றைய தொழில்நுட்பங்களைக் கொண்டு அட்சரம் அட்சரமாகக் கூடத் தனித்தனியே பதிவு செய்து பின்னால் சேர்த்துக் கொண்டு பாடலாக்க முடியும். கணினி இல்லாத நாட்களில் நாடாக்களில் பதிவான சமயத்தில் இதைச் செய்ய என்னவொரு நிர்ணயம் வேண்டும் என்று நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. வரலாற்றில் முகம்காட்டாது மறைந்திருக்கும் அந்த மகானுபாவ ரிக்கார்டிங் இஞ்சினியரின் பாதங்களில் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து சேவிக்கிறேன். 

இந்த விஷயத்தைப் பற்றி ஒரு வயதான இசை ரசிகரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் ஒரு விஷயம் சொன்னார். 

‘ரிக்கார்டிங் என்னமோ காருகுறிச்சியார் வாசிச்சதைக் கேட்டு ஜானகி அம்மா பாடியிருக்காங்க. ஆனால் படத்துல பாருங்க சாவித்ரி பாடினதை வாங்கி ஜெமினி கணேஷ் வாசிக்கறா மாதிரி காட்சிகள் வரும். ரெண்டு பெரிய கலைஞர்கள் சேர்ந்து இசைக்கும்போது, ஒருத்தர் பாடினதை அடுத்தவர் வாங்கி வாசிச்சா – முதல்ல பாடினதை ஒரு இம்மியாவது நுணுக்கத்தை கூட்டித்தான் பாடுவாங்க. இந்தப் பதிவுல – பதிவு செஞ்ச ஆர்டரை மாத்தி அமைச்சதுனால நமக்குக் கேட்கும் போது அந்த வாய்ப்பாட்டைக் கேட்டு நாகஸ்வரம் அதை ஒரு சின்னக் கல்லு மேல நகர்த்தினா மாதிரி நுணுக்கத்தை ஏத்தி வாசிச்ச உணர்வை ஏற்படுத்திட்டாங்க பார்த்தீங்களா ?’

நான் ஸ்தம்பித்துப் போனேன்.

இந்தப் படத்தில் சிங்கார வேலனே அளவிற்கு புகழ்பெறவில்லை என்றாலும் சூலமங்கலம் ராஜலட்சுமி பாடிய அருட்பாவை அடுத்து காருகுறிச்சியார் வாசித்துள்ள பிலஹரி ராக பிரஸ்தாரம் ஓரளவு பிரபலமானதே. சென்னை டிசம்பர் சீஸன் ஒன்றில் காலை வேளையில் இடம்பெறும் சங்கீதம் சம்பந்தமான உரை ஒன்றில் பிலஹரி ராகத்தைப் பற்றிய விவாதம் ஒன்றில் இந்தப் பதிவில் காருகுறிச்சியார் வாசித்துள்ள சஞ்சாரத்தை ஆதாரமாகக் காட்டி ராகத்தை ஒரு பெரிய விதுஷி விளக்கியதையும் நான் கேட்டிருக்கிறேன்.

இந்த இரண்டு பதிவுகளைத் தவிர, படத்தில் நாகஸ்வரம் இடம்பெறும் அற்புதமான கணங்கள் இன்னும் சில உண்டு. அதில் ஒன்றை மட்டும் விவரித்துக் கூறுகிறேன்.

படத்தின் ஒரு கதாநாயகி குமாரி கமலா. அவருக்கும் இன்னொரு நாட்டிய கலைஞருக்கும் போட்டி நடக்கிறது. கமலாவின் கால்கள் விஷப்பொடியைத் தீண்டியதால் தளர்ந்து போகின்றன. அவர் விழுந்துவிடும் நிலை வரும்போது எங்கிருந்தோ கேட்கிறது அந்தக் கந்தர்வ இசை. அந்தக் கருங்குழலின் இசை நெருங்க நெருங்க வலியும் மறந்து போகிறது. தன்னிச்சையாய் உடல் நடனமாடத் தொடங்குகிறது. இந்தக் காட்சிக்கு செஞ்சுருட்டி ராகம் கொஞ்சமும், அதே ராகத்தில் அமைந்த தில்லானாவில் சில வரிகளும் இடம்பெற்றுள்ளன.

முதல் இருபது நொடிகளில் இது காபியா, சாமாவா என்றெல்லாம் பூச்சி காட்டிவிட்டு கிராமிய இசைப் பிரயோகம் மூலம் சபைக்கு வருகிறது அந்தச் செஞ்சுருட்டி. நான் முதன்முதலாய் இதைக் கேட்ட போது இந்தப் பகுதியை மட்டும் இருபது முறை தொடர்ந்து கேட்டிருப்பேன். ராகம், அதன் இலக்கணம், அதில் வரக்கூடிய ஸ்வரங்கள்/பிரயோகங்கள் என்றெல்லாம் மனம் செல்லாமல் அதற்கும் மேலான ஓர் நிலைக்கு இட்டுச் செல்லும் லட்சிய கீதமாய் அமைந்துள்ள பகுதி. 

என்னைக் கேட்டால் இந்தப் படத்தில் காருகுறிச்சியாரின் உச்சம் என்று இதைத்தான் சொல்லுவேன்.

‘கொஞ்சும் சலங்கை’ படத்தைத் தவிர ‘ஆஸ்திக்கு ஒரு ஆணும், ஆசைக்கு ஒரு பெண்ணும்’ என்ற படத்திலும் காருகுறிச்சியாரின் வாசிப்பு இடம்பெற்றுள்ளதாக காருகுறிச்சியாரின் மகளை நான் சந்தித்தபோது எனக்குத் தெரிய வந்தது.

திரைத்துறையினரிடம் மிகவும் நெருங்கிப் பழகியவராகக் காருகுறிச்சியார் இருந்துள்ளார். சிவாஜி கணேசன், ஜெமினி கணேஷ், லதா மங்கேஷ்கர் போன்ற பெரும் திரையாளுமைகள் அவருக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் சினிமா கம்பெனி தொடங்கி படம் எடுக்க வேண்டும் என்றுகூடத் திட்டமிட்டுள்ளார். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தை தானே தயாரித்து அதில் வாசிக்கவும் செய்ய வேண்டும் என்கிற ஆசையும் அவருக்கு இருந்துள்ளது. 

அவர் வாசித்த திரைப்பாடலை அடிக்கடி கச்சேரிகளிலும் வாசித்திருக்கிறார் என்பதை இன்று நமக்குக் கிடைக்கும் பதிவுகள் தெரிவிக்கின்றன. அந்தப் பதிவுகள் சுட்டும் இன்னொரு விஷயம், அவர் திரைப்படத்தில் பங்கு கொள்ளாத பாடல்களையும் இடம், பொருள் கருதி வாசித்திருக்கிறார். 

ஓர் உயர்ந்த கீர்த்தனையைப் பாடம் செய்ய ஒரு வித்வான் எடுத்துக் கொள்ளும் அத்துணை பிரயாசைகளையும் ஒரு திரைப்பாடலை இசைக்கவும் காருகுறிச்சியார் எடுத்துக் கொண்டிருப்பதையே இந்தப் பதிவுகள் சுட்டுகின்றன. 

(தொடரும்)

Author Image

லலிதா ராம்

இசைத் துறை சார்ந்த கட்டுரைகளையும், இசை ஆளுமைகளையும் குறித்து தொடர்ந்து எழுதி கவனப்படுத்தி வருகிறார். ‘பரிவாதினி’ என்கிற அமைப்பின் மூலமாக அரிதான இசை நிகழ்வுகளை நடத்துகிறார். http://carnaticmusicreview.wordpress.com/ https://www.youtube.com/@Lalitharamwriter இவை அவரது தளங்கள்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
Theroof

தலைக்கு மேல் எல்லோர்க்கும் ஓர் கூரை

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?