ரமேஷ் வைத்யா
மாயாபஜார் சாயா ஜோர்
சினிமா பார்ப்பதற்கு – அந்தக் காலத்தில் – எனக்கு வித்தியாசமான காரணங்கள் எல்லாம் கிடைத்தன. அவற்றில் தலையாயது: பள்ளியில் ஷிஃப்ட் சிஸ்டம்.
பெரியகுளம் விக்டோரியா மெமோரியல் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். இடப்பற்றாக்குறை. சில வகுப்புகள் காலை எட்டு மணி முதல் ஒரு மணிவரை. பிற வகுப்புகள் மதியம் மட்டும். எனக்குக் காலை ஷிஃப்ட். மதியம் முழுதும் ‘லீவு’. இந்த விஷயம் என் வீட்டுக்குத் தெரியவே தெரியாது.
வழக்கமான இரண்டு வேளைப் பள்ளிக்கூடத்துக்குப் போலவே மதிய உணவைத் தூக்குச் சட்டியில் போட்டுக் கொண்டுபோய்விடுவேன். வீட்டில் அவ்வப்போது திருடுவதில் ஒரு நாளைக்குச் சராசரியாக ஐம்பது காசு உத்தரவாதம். சினிமா டிக்கெட் நாப்பது காசு. கடலை மிட்டாய், முறுக்கு தலா அவ்வைந்து காசு.
வகுப்பில்லாத மதியம் சினிமா பார்க்க என்று ஆனது. பெரியகுளத்தில் இரண்டே தியேட்டர்கள். ரஹீம், ஜெயா. பெரியகுளம் கொஞ்சம் பெரிய கிராமம். வெள்ளிக்கிழமை தோறும் படம் மாற்றுவார்கள். வாரத்தில் ஆறு மதியங்கள் என் கையில். வேறென்ன செய்ய, மேட்னி ஷோக்கள் பார்க்க வேண்டியதுதான். பக்கத்து ஊரான தேனிக்குப் போய்ப் படம் பார்க்கும் வயது ஆகவில்லை. ஒரு நாள் ரஹீம், ஒரு நாள் ஜெயா.
அந்த வகையில், தில்லானா மோகனாம்பாள், நிறம் மாறாத பூக்கள், உதிரிப் பூக்கள் போன்ற படங்களைப் பல முறை பார்த்த நினைவிருக்கிறது. வசனங்களும் பாடல்களும் மனப்பாடம் ஆக, படத்துக்குப் போகாத மதியங்களில், வீட்டுக்குப் போகாத பசங்களுக்கு வாயாலேயே படம் காட்டத் தொடங்கினேன்.
கதை சொல்லும்போது உள்ளதைவிட, பாடல்களை விவரிக்கும்போது எனக்குக் கிட்டிய உவகை அளவில் பெரியது. கேட்டவர்களும் பாதிக்கப்படவில்லை, வியப்பு.
‘பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே
மலையின் மீது ரதி உலாவும் நேரமே
சாயாத குன்றும் தாளாத நெஞ்சும்
தாலாட்டுப் பாடாமல் தாயாகுமோ’
என்று, மலையின் மீது ராதிகா உலாவுவதைக் கவனிக்காமல் ரதி அக்னிஹோத்ரி உலாவுவதை மனக்கண்ணில் பார்த்தபடி விஜயன் பாடும் காட்சியை விவரிப்பேன். மனோவசியம் செய்துவிடும் மெட்டு. தக்கிட்டத் தக்கத் திமி தக்கிட்டத் தக்கத் திமி தக்கிட்டத் தக்கத் திமி என்று சொற்களின் கை பற்றி அழைத்துச் செல்லும் லயம். மலேசியாக் குரலில் இதயத்தின் இருட்டறைகளுக்குள் செலுத்தப்படும் ஆதங்கம். இசைக்கருவிகளின் இணைவில் வேறோர் உலகை சிருஷ்டிக்கும் ஆற்றல். தா..லா.ட்டுப் பா..டா.மல் தா..யா.குமோ… என்கிற புள்ளி வைத்த இடங்களின் ஏகாந்த இழுவைகள்…
இசையெனும் பொன்மானில் ஏமாந்த மனம் பிற்காலத்தில்தான் வரிகளைக் கவனித்தது. எனக்குப் பிடித்த கண்ணதாசன். அருத்தமோ பொருத்தமோ இல்லாத வரிகள். ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்.’ சரி. ‘அமுத கீதம் பாடுங்கள்.’ ஓகே. ‘பாடுங்கள்.’ ம்ம்… ‘காதல் தேவன் காவியம்.’ ஓஹோ. ‘நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்.’ ம்ஹூம். பாட்டு முழுசுமே இப்படி தொடர்பில்லாமல், பஞ்சு அருணாசலம் எழுதியது போன்ற வரிகள். ஆனால், அதைக் கேட்ட உடனே கவனிக்கவிடாத இசை. நாமாகப் பாடல் கேட்க வழியில்லாத காலத்தில் தியேட்டரிலேயே பல முறை கேட்டதால் பிடிபட்டது.
நாமாகப் பலமுறை பார்ப்பது வேறு விஷயம். அதற்கு மனம் தயாராகிவிடும். கேப் விட்டு, மனதைத் தயாரித்துக்கொண்டு பார்க்கலாம். ஆனால், பால நாகம்மா பார்த்தது அப்படி அல்ல. வழக்கம் போல மதியப் போதில் ஜெயா தியேட்டருக்குப் போனால், அங்கே பால நாகம்மா.
சரத்பாபுவின் எதிரில் ஸ்ரீதேவியின் சிங்காரத் தூண்களான செவ்வாழைக் கால்கள் ஆடும் படம் உங்கள் நினைவுக்கு வந்ததா? அடேங்கப்பா என்னா பாட்டு!
‘செவ்வாழைக் கால்கள்
சிங்காரத் தூண்கள்
நடந்தால் இடையொரு நடனம்
மேல்பாதி தனைப் பார்க்க
ஒரு நூறு நாளாகும்…’
என் சித்தப்பா ஒருவர் விழுப்புரத்துக்குப் பக்கத்திலுள்ள திரௌபதி அம்மன் கோயிலுக்குப் போனார். சுற்றிப்பார்க்க என்னையும் கூட்டிப் போகுமாறு அடம்பிடித்தேன். ‘ஏய் பத்து நிமிஷத்துக்கு மேல்பாதியில பாக்க ஒண்ணுமில்லடா’ என்று சொல்லியிருக்கிறார். இவன் நூறு நாள் எதைப் பார்ப்பான்… சித்தப்பா பொய் சொல்லியிருப்பானோ என்று குழப்பம் இடையிலேயே
‘கோடி மலரில் இவள் குமுதம் – சுவை
கூடும் நகையில் இவள் அமுதம்
கலசம் குலுங்கும் இளமயில்
கவிஞன் மயங்கும் கலைமயில்’
என்று பாடிக்கொண்டே வந்து,
‘வீணை மேனிதனில் பின்குடங்களென’ என்று யேசண்ணா தூக்குவார் பாருங்கள்… மதி மயங்கி கதிகலங்கிப் போகும். இதில் காட்சியிலேயே காட்டிவிடுவதால் மேல்பாதிக்குக் குழம்பியதைப் போல் பின்குடங்களுக்குக் குழம்பத் தேவையிருந்திருக்கவில்லை.
ஆனால், அந்த அன்று நான் போய் மாட்டியது இந்த பால நாகம்மா இல்லை. அது எஸ்வி ரங்காராவ் நடித்த பிளாக் அண்ட் வொயிட் பாநா. நாயக நாயகிகளை விட்டுவிட்டு ரங்காவைச் சொல்லுவதை அவரது நடிப்புக்கான சான்றிதழாகக் கொள்ளலாம்.
டைட்டில் போடுவதை நாங்கள் சின்னப் பையன்கள் எழுத்துப் போடுவது என்போம். இந்தப் படத்தில் எழுத்துப் போட்டு முடித்த பிறகு படக்கதையையே எழுத்துப் போட்டார்கள்.
அன்பே உருவாகி அறநெறி தவறாது நாட்டையாண்டு மன்னுயிர் எல்லாம் தன்னுயிரெனப் போற்றி, குடிமக்களை ஒரு குறை இல்லாது ஆண்டுவந்த அங்கநாட்டு மன்னன் நவபோஜனுக்கும் மகாராணி பூலக்ஷ்மி தேவிக்கும் ஒரே ஒரு குறை. அதுதான் மக்கள் இல்லாக்குறை. அந்தக் குறை தீர அரச தம்பதிகள் அனேக விரதங்களை இருந்தார்கள். தானங்கள் செய்தார்கள். தவமேற்கொண்டார்கள். அப்போது ஒருநாள் பரமயோகி ஆனந்தர் அரண்மனைக்கு விஜயம் செய்தார்…

இப்படி எழுத்துப் போட்டதும், ‘ஆஹா… இந்தப் படத்தைப் படித்தே முடிக்க வேண்டும் போல’ என்று நினைத்தேன். ஆனால், கொஞ்ச நேரத்திலேயே சினிமாவை ‘காட்ட’ ஆரம்பித்துவிட்டார்கள்.
பிள்ளை இல்லாப் பிரச்னை போக்க அந்த மகாராணி ஒரு பாட்டுப் பாடுகிறாள்.
‘ஜெய ஜெய கிரிஜா ரமணா
ஜெய ஜெய சங்கர நாகாபரணா
ஜெய ஜெய கிரிஜா ரமணா…’
பாட்டைக் கேட்டு லிங்கத்தில் சிவன் ஏறி, கோயிலுக்குக் கிழக்குப் பக்கம் இருக்கும் மரத்தில் இருந்து ஒரு மாம்பழத்தைப் பறித்து சாப்பிடச் சொல்கிறார். ‘கருணா விலாசா கைலாச வாசா எனக்கு அருள் செய்தாயா? தன்யன் ஆனேன் ப்ரபோ’ என்று சொல்லிவிட்டுப் பழம் பறிக்கப் போகிறாள். (தன்யன் ஆண்பால் இல்லையா?) மரத்தின் கீழ் இருக்கும் பாம்புப் புற்றை மிதித்து மேலேறி நான்கைந்து மாம்பழங்களைப் பறித்துவிடுகிறாள் ராணி. அதில் ஒரு பழம் தவிர மற்றவை எல்லாம் அவள் கையில் இருந்து தங்களைத் தாங்களே பிடுங்கிக்கொண்டு மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்கின்றன. அதே நேரத்தில் புற்றின் உள்ளே இருந்து ஒரு பாம்பு வந்து மனிதனாக… ச்சீ… நாகராஜாவாக மாறிவிடுகிறது. ‘என்னை மிதித்துப் பழம் பறித்தாயா? பிள்ளை பிறந்த ஆறு மாதத்தில் நீ செத்துவிடுவாய்’ என்று சாபம் கொடுத்துவிட்டுப் போகிறது.
கட் செய்தால் பிள்ளை பிறந்துவிட்டது. ஒன்றல்ல ஏழு பிள்ளைகள். ஏழும் பெண் பிள்ளைகள். ‘தாலே தாலே என் ப்ரேமைக் கிளிகாள் தாலே தாலே தாலே அன்பே பைங்கிளிகாள் தாலே ஜோ ஜோ ஜோ ஹோ…’ என்று பாடி தொட்டில் ஆட்டுகிறாள். ஆறு மாதம் ஆகிவிட்டது. நாகேந்திரன் பாம்பாய் வந்து மனிதனாக மாறி பூலக்ஷ்மியைக் கடிந்துகொண்டு மறுபடி பாம்பாய் மாறி கொத்திக்கொல்கிறான். பிள்ளைகளுக்கு ஏழு வயதாகையில் மன்னன் மறுமணம். மாற்றாந்தாய்க் கொடுமை. ஓட்டைக் குடத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்கிறாள். சோறு போடுவதில்லை. செத்த பூலக்ஷ்மி வந்து குட ஓட்டைகளை அடைக்கிறாள். மரங்களில் பழங்கள் வரச் செய்து பசியாற்றுகிறாள். சித்தி விஷம் வைக்கிறாள். அம்மா, மாயத்தால் விஷம் போக்குகிறாள். சித்தி பிள்ளைகளை பாழடைந்த கோயில் பூட்டி விஷப்புகை போடுகிறாள். அம்மா, மன்னனின் கனவில் தகவல் சொல்லி காப்பாற்றச் செய்கிறாள்…
அத்தனையும் பத்து நிமிடங்களுக்குள். தமிழின் (டப்பிங்) சிறார் சினிமாவின் தொடக்கமே இந்த பால நாகம்மாவாகத்தான் இருக்கும். சாரிப்பா, இந்தக் காலச் சிறார்கள் மன்னித்துவிடுங்கள். அந்தக் காலச் சிறாரான என்னை மேலே சொன்ன அத்தனை மந்திரஜாலக் காட்சிகளும் கவர்ந்துவிட்டன. இது மாதிரிப் படங்கள் அடுத்தடுத்து வராதா என்று ஏங்கி வரவரப் பார்த்தேன். மணாளனே மங்கையின் பாக்கியத்துக்கும் கணவனே கண்கண்ட தெய்வத்துக்கும் எனக்கு இன்று வரை குழப்பம் தீரவில்லை. அந்த நேரத்திலேயே, கொழுநனே கொடிக்குக் கொம்பு, பர்த்தாவே பாவைக்குப் பாதை, வீட்டுக்காரனே விளக்கின் ஜோதி, ஆம்படையானே அகத்துக்கு அழகு என்றெல்லாம் படங்கள் தயாராவதாக வதந்தி. எங்கள் ஊருக்கு வராததால் நான் பார்க்கவில்லை.
பார்த்த ‘கணவனே கண்கண்ட தெய்வம்’, என் மாயாஜாலப்பசிக்கு நல்ல விருந்து போட்டது. ஜெமினி கணேசன் சாபத்தால் குரூபி ஆகிவிடுவார். கூன் விழுந்துவிடும். அதில் கவரப்பட்டு நானும் குரூபி ஆனேன். அண்ணனின் சட்டையைப் போட்டுக்கொண்டு, அக்காளின் பாவாடை தாவணிகளை மூட்டையாகச் சுருட்டி முதுகில் செருகிக்கொண்டு குனிந்து நடந்தேன். பிற்காலத்துச் சூர்யா போல் பேரழகனாக என்னை நானே நினைத்துக்கொண்டேன். வெவ்வேறு உலகங்களுக்கூடாக சஞ்சாரம் செய்யும் கதை. ‘உள்ளதை உள்ளபடி காட்டும் மாயக்கண்ணாடியே, மேப்படியான் தற்போது எங்கே உள்ளான்? என்ன செய்துகொண்டு உள்ளான்?’ என்று கேட்டால், அந்தக் கண்ணாடி பதிலைக் காட்டிவிடும். வீடியோ காலிங்கின் முன்னோடி. முன்னோர்கள் ஒன்றும் முட்டாப்பய புள்ளைகள் கிடையாது என்பதை உணர்த்தும் கற்பனை.
முந்தைய பால நாகம்மாவுக்கும் இதற்கும்தான் கதை சொல்லலில் எவ்வளவு வித்தியாசம்! கூடிய வேகத்தில் தமிழ் சினிமா முன்னேறுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. இளவரசி அஞ்சலி தேவியை சிப்பாய் ஜெமினி கணேசன் காதலிக்க, வில்லத் தளபதி நம்பியார் குறுக்கிடும் கதைதான் எனினும் கச்சிதமான திரைக்கதை, நறுக்குத் தெறிக்கும் வசனங்கள். ‘காதல் நாடகத்திலே கண்ணீரும் கலந்தால்தான் அதற்கு எப்போதுமே த..னீ.. களை ராஜகுமாரி.’
காதலர் சந்திக்கும் காட்சிகளில் துள்ளி விளையாடியது என் மனமும்தான்.
‘கண்ணாலே உள்ளம்தன்னை
கொள்ளை கொண்ட கள்வனே
எண்ணாத எண்ணம் எல்லாம்
எண்ணிஎண்ணி ஏங்குறேன்
எந்தன் ஆசை நிறைவேறும்
நாளும் எந்த நாளோ
எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ
கண்ணும் கண்ணும் ஒன்றாய்
கூடி பேசும் விந்தைதானோ…’
இதில் மயங்கித் தெளியு முன்னர், நாகப்பாம்பாக நம்மைச் சுருட்டிவிடும் லலிதா.
‘உன்னை ஹ்க் கண் தேடுதே
உன் எழில் காணவே ஹ்க்
உள்ளம் நாடுதே ஹ்க்’
பத்மினி அக்கா லலிதாவின் லாவண்யங்களில் பார்க்கும் இளைஞர்களுக்கே விக்கல் வந்துவிடும்.
நான் அப்போது இளைஞனாகவில்லையாதலால், வேறொரு பாட்டுக்குக் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தேன்.
‘தங்கத் தொட்டிலில் தாலாட்டியே
சுகுமாரனை சீராட்டியே
வெண்ணிலா காட்டியே
பாலன்னம் ஊட்டியே
கொஞ்சிடும் நாள் வந்திடுமே
அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண்வளராய் என் ராஜா
வாழ்விலே ஒளிவீசவே
வந்தவனே கண்வளராய்’
அப்பா இல்லாத சிசு நான்தான். காசே இல்லாத அபலை அஞ்சலிதேவி என் அம்மாதான். நாங்கள் கையறு நிலையில் இருக்கிறோம். நம்பிக்கையின் பாடலைப் பாடுகிறாள் அம்மா அஞ்சலிதேவி.
இப்பாடலின் துன்பத்தைப் போக்கும் விதமாக அமைந்தது ம.ம.பா. படத்தின் அஞ்சலி தேவி பாடும் பாடல்.
இந்திரலோகத்தில் அஞ்சலிதேவி ஆடிக்கொண்டிருக்க, பூமியிலிருந்து ஜெமினியார் புல்லாங்குழலை ஊதி அழைக்க, அங்கே துணுக்குறும் அஞ்சலிதேவி,
‘எழில் தரும் ஜோதி மறந்திடுவேனா
இகம் அதில் நானே பிரிந்திடுவேனா
என்னை மனம் நாடிட சமயமிதானா
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னை ஏ ராஜா
ஆருயிரே மறவேன்’
என்று (கேட்போர்) உயிரை உருக்கும் மெட்டைப் பாடுவார். இசையமைப்பாளர் ஆதிநாராயணராவின் அடிமையாகிவிடலாம் என்ற எண்ணத்தைத் தூண்டும் பாட்டு. மாயாஜாலக் கதைகளின் அண்ணன் ஜெமினி என்றால், மன்னி அஞ்சலிதேவி என்று என் மனதில் படிந்தது. இந்தப் படத்தில் வந்த மந்திர ஜாலக் காட்சிகளும் என் இளமனதை ஈர்த்தன.
பின்னாளில்தான் தலைப்பு நினைவில்லாத ஒரு படத்தில் ‘தந்திரக் காட்சிகள்: ரவிகாந்த் நிகாய்ச்’ என்று டைட்டில் பார்த்தேன். இந்தப் பெயரே ஒரு தந்திரமாகத்தான் தொனித்தது. உ.பி-யைச் சேர்ந்த ஒளிப்பதிவாளரான இவர் பிற்பாடு ஹிந்தித் திரைப்படங்களை இயக்கவும் தொடங்கினார் என்பதைப் பின்னாளில் அறிய முடிந்தது. இவரது கைவண்ணத்தால் பல மாயாஜாலக் காட்சிகள் மனதில் நிறைந்தன.
வாராய் நீ வாராய் என்று நண்பனை அழைத்துக்கொண்டு, உலவும் தென்றல் காற்றோடு நடந்து மந்திரிகுமாரி; கலாவதியைக் கண்ணின் கருமணியாக்கிய மர்மயோகி; கல்யாண சமையல் சாதம் போன்ற விருந்தைப் போட்ட மாயாபஜார் என்று மாய விருந்து தொடர்ந்தது.
முறுக்கும் கடலை மிட்டாயும்தான் இடைவேளைகளில் தின்பேன். மாயா பஜார் படத்தில்தான் டீ குடித்தேன். அது நான் பெரிய ஆள் ஆனதன் குறியீடு.
கூடிய வேகத்தில் தமிழ் சினிமா முன்னேறுகிறது என்று சொன்னேனில்லையா, அதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலை வந்தது. கறுப்பு வெள்ளை போய் கலர் வந்தது. தொழில்நுட்பம் கூடியது. மாயக் கதைகளும் புராணக்கதைகளும் மாறி சமூகக் கதைகள் வந்தன. மறுபடி ஒரு கட்டத்தில் மந்திரக் கதைகளின் ஆதிக்கம் தொடங்கியது. இப்போதும் அந்தக் காற்று ஆந்திராப் பக்கமிருந்தே அடித்தது. விட்டலாச்சார்யா என்ற பெயர் உச்சாடனத்துக்கு உரியதாக மாறியது. இவருக்கு மாயாஜால மன்னன் என்றும் தமிழர்கள் பட்டப் பெயர் கொடுத்தார்கள். வரலெக்ஷ்மி விரதம், மதன காம ராஜு கதா, நவகிரக பூஜா மகிமை என்றெல்லாம் தெலுங்கில் இவர் இயக்கிய சினிமாலு தூள் பரப்ப, தமிழுக்கு வந்தார். ஜகன்மோகினி, மாய மோதிரம் என்று கொழித்தார்.
பழைய நினைவில் மாயப் படம் பார்க்கப் போனால், ஜகன்மோகினியில் வரும் பேய்கள் பயமுறுத்துவதற்குப் பதில் சிரிப்பே மூட்டின. விட்டலாச்சார்யா புண்ணியத்தில் என் நம்பிக்கை ஒன்று நாசமாயிற்று. பேய் என்றால் சடை தொங்க ராத்திரியில் வரும்; கறுப்பாக, கொஞ்சம் சிதைந்துபோன கிழவி போல் இருக்கும். பிசாசு என்றால் வெண்புகை வடிவில் மொட்டையாக இடுப்புக் கீழே வால் நீண்டு அலையும் என்று நினைத்திருந்தேன். விட்டலாச்சார்யாவின் பேய்கள் வெள்ளையாகவும் இருந்தன, சடையும் இருந்தது, கால்களும் உண்டு. பட்டப் பகலில் வருவதால் காமெடியாகவும் இருந்தது. வெள்ளைப் போர்வை போர்த்திக்கொண்டு, அத்தையின் சவுரி முடியைத் தலையில் போட்டுக்கொண்டால் போதும்.
என் தாத்தா ஒருவர், ‘வெளியே போனே, காலை ஒடைச்சு அடுப்புல வச்சுடுவேன்’ என்பார். விட்டலாச்சார்யாவோ வன்முறையை ஆதரிக்காமல் – காலை உடைக்காமலேயே – அடுப்பில் வைத்து எரித்தார். காசைக் கொடுத்து விட்டலாச்சார்யா படத்துக்கு பயப்படப் போனால், அது தோல்வியில் முடிந்தது. ஆபாச நடனங்கள் உண்டு என்பதைப் போஸ்டர்கள் உணர்த்தியமையால் காமத்தைக் கிளர்த்திக்கொள்ளப் போனோருக்கும் ஏமாற்றமே. ஜெயமாலினியையும், ஜோதிலட்சுமியையும் பார்த்தால் அந்த உணர்வா வரும்? டான்ஸ் ஆடும் உணர்வுதான் வரும்.
சின்ன வயதில் எத்தனை ஏமாற்றங்களைத்தான் எதிர்கொள்வது?











