The Talkie
Thursday, April 9, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home ஆளுமைகள்

ஸ்டோரி போர்ட் – தவிர்க்க முடியாத தொழில்நுட்பம் 

The Talkie by The Talkie
April 15, 2025
in ஆளுமைகள்
A A
2
Storyboard_02
Share on WhatsappShare on FacebookShare on Twitter
Author Icon கோ. ராமமூர்த்தி


‘ஸ்டோரி போர்ட்’ தற்போது இந்திய சினிமாத் துறையில் பரவலாக உச்சரிக்கப்படும் வார்த்தை. ஓவியத்துக்கும் சினிமாவுக்கும் பிரிக்கவே முடியாத தொடர்பு உண்டு.  ஓவியக்கலைதான் பல்வேறு பரிணாமங்கள் பெற்று காட்சிவழியாக கதை சொல்லும் சினிமாவாக  மாறியிருக்கிறது.

20ஆம் நூற்றாண்டில் முத்திரை பதித்த பல சினிமா கலைஞர்கள் தமது திரைமொழியால் எல்லோரையும் கவர்ந்தார்கள். ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக், ஸ்டான்லி குப்ரிக், அகிரா குரோசவா போன்ற மேதைகள் தங்கள் திரைமொழியை வெளிப்படுத்த கையாண்ட மிக முக்கியமான தொழில்நுட்பம் ஸ்டோரி போர்ட். 

ஹிட்ச்காக் திரைக்கதை எழுதும்போதே சில காட்சிகள் எப்படி வரவேண்டும் என்று வரைந்து வைத்துக்கொள்வார். குரோசவா திரைத்துறைக்கு வரும் முன்னரே ஓவியர் என்பதால்  முக்கியமான காட்சிகள் வரைந்து வைப்பது என்பது அவர் இயல்பு. 

ஸ்டான்லி குப்ரிக் ஒரு இடத்தின் புகைப்படத்தை எடுத்துக் கொள்வார். அந்தப் புகைப்படத்தின் மீது தனக்குத் தேவையான ஷாட்டினை கம்போஸ் செய்து வரைந்து கொள்வார். மார்ட்டின் ஸ்கார்சிசி சிறு வயது முதலே ஓவியம் வழியே கதை சொல்லும் வித்தையில் தேர்ந்தவர். “எனது முழுபடத்தையும் ஸ்டோரிபோர்டு வழியாக முன்னரே பார்த்துவிடுவேன்” என்கிறார் மார்டின் ஸ்கார்சிசி. இவ்வாறான முறைகளில் இயக்குநர்கள் தத்தம் திரைமொழியை உடன் பணியாற்றும் ஒளிப்பதிவாளர், நடிகர், கலை இயக்குநர் என அனைவரிடமும் ஸ்டோரிபோர்டு மூலம் ஒரு தெளிவான பார்வையை கடத்த முடிந்தது.

alfred hitchcock
akira kurosawa
martin scorsese
stanley kubrick
Akira Kurosawa storyboards side-by-side with the final frames from the  film. : r/Filmmakers
Sketching Out 'Psycho': Production Storyboards From 15 Beloved Films - The  Atlantic
story board 3
story 2

திரைமொழியை கையாண்ட மேதைகளின் அடுத்த நகர்வு புதிய சாகசக் கதைகள். Jurassic Park, The Lord Of The Rings, Terminator போன்ற வாயைப் பிளக்கவைத்த படைப்புகளை நம் வாழ்நாளில் மறக்க முடியாது. சினிமாத்துறையில் தொழில்நுட்பம் வளர வளர அதற்கேற்றாற்போல் கதைகளும் விரிவாக்கப்பட்டு சாத்தியமே இல்லாத கற்பனைகளை காட்சிகளாக  சாத்தியமாக்க இயக்குநர்களுக்கு முன்காட்சியோட்டம் (Previsual) தேவைப்பட்டது. திரைமொழிக்காக வரையப்பட்ட ஸ்டோரிபோர்ட் பிறகு கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்திற்கு பேருதவியாக இருந்தது, இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், Jurassic Park படத்தில் வரும் டைனோசரின் ஒவ்வொரு நகர்வையும் துல்லியமான ஒரு காமிக் ஓவியம் போல வரைந்த பின்னரே சூட்டிங் செய்தார். 1997ல் பிரமாண்ட தயாரிப்பில் உருவான Titanic திரைப்படத்திலும் ஒவ்வொரு காட்சிகளையும் வரைந்து அதை அப்படியே திரைப்படமாக்கினார்.

james cameron

titanic

2000த்துக்குப் பிறகு உருவான படங்களில் ஸ்டோரிபோர்டின் பங்கினை முன்பைவிட புதிய முறைகளில் கையாண்டார்கள். கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய Inception படத்தில் வரும் சண்டைக்காட்சிகளை வழக்கமான காட்சியாக வரையாமல் தொடர்காட்சியையும் அடுத்தடுத்த நகர்வையும் ஆக்ஷனோடு வரைத்திருந்தார் ஓவியர் கேப்ரியல் ஹார்ட்மேன். 

Christopher Nolan | Biography, Movies, Batman, Oppenheimer, & Facts |  Britannica
Nolan's Drawings – mofussillab

நோலனின் ஆஸ்தான ஸ்டோரி போர்ட் ஓவியராக கேப்ரியல் ஹார்ட்மேன் (Gabriel Hardman) Interstellar, The Dark Knight Rises படங்களில் தொடர்ந்து பணியாற்றினார். மற்ற ஸ்டோரி போர்ட் ஓவியர்களைக் காட்டிலும் இவர் ஆக்சன் காட்சிகளை வரைந்த விதம் மிகவும் ஈர்க்கும் வண்ணம் அமைந்திருக்கும். நோலன் போன்ற மிக நுட்பமான கதைசொல்லிகளுக்கு இவர் ஒரு வரம்தான். 

tiger story board

வரலாற்று படங்களில் ஸில்வாய்ன் டிப்ரே (Sylvain Despretz) மிக முக்கியமான ஓவியர் Gladiator முதல் The Avenger, Harry Potter and the Goblet of  Fire சமீபத்தில் வெளியான The Animal Kingdom (2023) வரை இவர் வரைந்த ஸ்டோரிபோர்ட் ஓவியத்தால் ஹாலிவுட்டில் தவிர்க்கமுடியாத ஓவியராக இன்றும் தன் பங்களிப்பை செலுத்திவருகிறார்.

இப்படி பல ஓவியர்களின் பங்களிப்பில் ஹாலிவுட்டில் பிரமாண்டப்படங்கள் பேரனுபவத்தைத் தந்திருக்கின்றன. ஓவியமாக வரைந்து அதைக் காட்சிப்படுத்துவது  என்பது ஜப்பானிய கலை மரபு. 1900களில் அகிரா குரோசவா மட்டுமல்ல, இஷிரோ ஹோன்டா போன்ற இயக்குநர்கள் ஓவியம் வழியேதான் காட்சிகளை உருவாக்கினர். அதே சமயத்தில் வால்ட் டிஸ்னி ஓவியங்களை ஒருங்கிணைத்து அனிமேசன் வழியே புதிய கலை வடிவத்தை உருவாக்கினார். 

மெல் கிப்ஸன்  இயக்கிய “Passion of Christ” படத்தில் crucifixion (ஏசு சிலுவை அறைதல்) காட்சியினை மிக அற்புதமாக ஸ்டோரிபோர்ட் ஆக  வரைந்திருப்பார் ஓவியர் மைல்ஸ் டேவேஸ் (Miles Teves). இவரது ஓவியங்கள்தான் என்னை ஸ்டோரிபோர்ட் ஓவியராக மாற்றியது. மைல்ஸ் டேவேஸ் காலண்டர்களுக்கு வரையக் கூடியவர். அதனால் அவர் இந்தப் படத்துக்கு அசலான ஓவியங்களையே ஸ்டோரி போர்டாக வரைந்திருந்தார். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஓவியங்களைப் பார்த்தால், அவர் எந்தளவுக்கு உள்வாங்கி மெனக்கிட்டிருக்கிறார் என்பது புரியும். வெறும் கோடுகள் கொண்டே காட்சிகளை அவர் உருவாக்கி இருக்கலாம் ஆனால் ஏசுவின் உடல் முழுதும் படிந்திருக்கும் கீறல்களில் வடிந்தோடும் ரத்தத்தை வரைந்த விதம் பார்ப்பவர்களை உணர்ச்சி ததும்பச்செய்யும் வண்ணம் அமைந்திருக்கும். 

Mel Gibson (Actor and Film Director) - On This Day
black panther

2018ல் வெளியான Black Panther திரைப்படத்திற்கு வரைந்த ஸ்டோரிபோர்ட் மற்றவற்றில் இருந்து மிகவும் வித்தியாசமானது. வழக்கமான கேமிரா ஆங்கிள்களை முன்வைத்து வரையாமல்  முற்றிலும் மாறுபட்ட யுத்தியை பயன்படுத்தி இருப்பார்கள். குறிப்பாக ஹீரோ ப்ளேக் பாந்தர், வில்லனின் காரின் மீது குதிப்பது மிக பிரமாதமாக இதுவரை பார்த்திராத வகையில் ஈர்க்கச்செய்யும். இவ்வுத்தியை சாத்தியமாக்கியது Dan Milligan (டான் மில்லிகன்) ஓவியங்கள். தற்போது ஹாலிவுட்டினை அசத்தி வரும் என்னுடைய ஆதர்சமான ஓவியர். மிக நுட்பமான ஓவியர். இவர் உருவாக்கிய ஸ்டோரி போர்டில் ஒரே ஃபிரேமில் அடுத்தடுத்த பிரேம்களை வரைந்திருப்பார். இங்கு கொடுத்திருக்கும் ஓவியத்தில் ப்ளாக் பாந்தர் பறந்து கீழே வந்து இறங்குவது வரை அவர் ஒவ்வொரு ஃபிரேமையும் கொண்டு வந்திருக்கிறார். மிகவும் சவாலான காட்சிகளை மிகத் தெளிவாகப் புரியும்படி  வரைந்திருப்பார். 

Black Panther — Dan Milligan Illustration Ltd.
ArtStation - Black Panther - storyboards and key frames.

இப்படி ஓவியங்கள் வழியே சினிமாவை கண்டடைந்தது போல் தமிழ்நாட்டில் கூத்து வழியே சினிமாவை கண்டடைந்தோம். நாடகம்,கூத்து போன்ற நிகழ்த்துக்கலையில் கோலோச்சியவர்கள் சினிமாத்துறையை நோக்கி நகர்ந்து சாதனைப்படைத்தனர். அதனாலேயே ஓவியம் வழியே சினிமாவை பார்க்கவேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அப்படியிருந்தும் கமல்ஹாசன், மணிரத்னம் போன்றோர் மேற்குலக திரைப்படங்களை உள்வாங்கி பல தொழிநுட்பங்களை சோதனை முயற்சியாக தமிழ் சினிமாவில் முன்னெடுக்க வைத்தனர். டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்தபிறகு previsualலுக்கான வாய்ப்புகள் பரவலாக உருவானது. காரணம் film வழியே திரைப்படங்கள் உருவான காலகட்டத்தில் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் இருந்ததை டிஜிட்டல் தகர்த்தது. அதே சமயம் காட்சிப்படுத்துவதில் தனித்து நிற்க மெனக்கெடவேண்டியிருந்தது. இதன் காரணமாக இன்றைக்கு ஸ்டோரிபோர்டு ஒரு காட்சி முன்னோட்டத்திற்காகவும் தனித்துவ வடிவமைப்பிற்காகவும் பயன்படுகிறது. 

ஓவியக்கல்லூரியில் முதுகலை முடித்த பிறகு ஆனந்தவிகடனில் ஓவியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மேலும்  அனிமேசன் கற்பதிலோ அல்லது அழகிய காட்சிகள் வரைவதிலோ இல்லாத ஆர்வம் நேரடியாக மனிதர்களை வாழ் சூழல்களை வரைவதில் இருந்ததால் கிராபிக் நாவல்  ஓவியங்கள் மீதும் ஈர்ப்பு உருவானது. பின் அதுவே ஸ்டோரிபோர்ட் ஓவியராக உருவாக உதவியாகவும் இருந்தது. தமிழ் சினிமாத்துறை சூழலில் ஸ்டோரிபோர்ட் என்பது மிக மிகச் சிலரால் மட்டுமே கையாளப்பட்டது. பெரும்பாலான தயாரிப்பு நிறுவனம் ஸ்டோரிபோர்ட் என்று சொன்னாலே அது தேவையில்லை எனத் தவிர்த்தனர். அது இயக்குனரின் சாமர்த்தியத்தை கேள்விக்குள்ளாக்கும் என்று கருதினர். இதுவும் போக, ஸ்டோரிபோர்ட் ஓவியர்களுக்கான ஊதியத்தை இயக்குநர்தான் தரவேண்டும் என்று விலகினர்.

ஸ்டோரிபோர்ட் பற்றிய அனுபவம் இல்லாத ஓவியர்களை பயன்படுத்தி மேலோட்டமாக வரைந்துகொண்டனர். 

2010ற்கு பிறகு தமிழ் சினிமா புதுமையான வேறுபட்ட கதையம்சங்கள் கொண்ட திரைப்படங்கள் உருவாகத் தொடங்கியது. அதற்கு ஸ்டோரிபோர்டு அவசியமானது.

 திரைமொழி,தொழில்நுட்பம் கடந்து திரைக்கதை அமைப்பிற்குள் ஸ்டோரிபோர்ட் பெரும் பங்களிப்பை உறுதிபடுத்தியது. தற்போது பெரும்பாலான திரைப்படங்களில் ஸ்டோரிபோர்ட் பயன்படுத்தப்படுகிறது. 

நான் சினிமாத்துறையில் நுழைந்தபோது சில தயாரிப்பு நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து ஸ்டோரிபோர்டை பயன்படுத்தினர். Eros International நிறுவனத்தில் ஸ்டோரிபோர்டு மற்றும் concept art  ஓவியராக பணியாற்றினேன். அப்போதுதான் பாகுபலி எனும் பிரமாண்ட படைப்பு வெளியான சமயம். அப்படத்தில் நூறு ஓவியர்கள் கொண்டு வரையப்பட்ட ஓவியங்களை ப்ரமோசன் வீடியோவாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. ஓவியர்கள் மீது தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் மதிப்பை கூட்டியது. 

பொதுவாக ஸ்டோரிபோர்டுக்கு வெறும் ஓவியத்திறமை மட்டும் போதாது. இயக்கம், படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, கலை, இயக்கம், நடிப்பு என பல நுட்பங்களை உள்வாங்கி இயக்குநரின் சிந்தனையை உறுதியாக்குவதே ஸ்டோரிபோர்டின் நோக்கம். விஷுவல் எஃபக்ட், சண்டைக்காட்சிகள், வரலாற்றுக்களம், என பலதரப்பட்ட தேவைகளை சில கோடுகளின் மூலமாக இயக்குநரால் தன் குழுவிற்கு தெளிவுபடுத்த முடிகிறது. இதனால் மறைமுகமாகவும், நேரடியாகவும் தயாரிப்பு செலவினங்களைக் கட்டுப்படுத்த முடிகிறது. ஸ்டோரிபோர்ட் என்றால் விலகிய தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது ஒரு கதையை படமாக்க அணுகும்போதே ஸ்டோரிபோர்டு வேண்டுமென்று கேட்கத் தொடங்குகின்றனர். 

நான் முதன்முதலில்  முழுநீள படத்திற்குப் பணியாற்றியது அயலான் இயக்குநர் ரவிக்குமாரிடம்தான். கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட சீன்களை வரையவேண்டியிருந்ததால் இரண்டு ஓவியர்களைக் கொண்டு  ஸ்டோரி போர்டினை உருவாக்கினார். நானும் ஓவியர் சரவணனும் இணைந்து பதினொரு மாதங்கள் பணியாற்றினோம்.

ஒரு சீனுக்கான மொத்த ஸ்டோரிபோர்டையும் சிறிய அளவில் அனிமேஷன் செய்து அந்த சீனுக்கான நேரத்தைக் கணக்கிட்டோம். கிராஃபிக்ஸ் வரும் இடம், ஏலியன் இடம்பெறும் சீன்கள் என அனைத்தையும் தயாரித்து கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் குழுவிடம் முன்னரே கொடுத்துவிட்டோம். அதற்கான பணிகள் முன் தயாரிப்பின்போதே துரிதமாக்கப்பட்டது. 

படப்பிடிப்பின்போதும் ஸ்டோரிபோர்டாக வரைந்த காட்சிகள் எந்தவித மாற்றமுமின்றி பெரும்பாலான காட்சிகள் அப்படியே படமாக்கப்பட்டது. படம் காலதாமதத்தால் 2023 ஆண்டு வெளியானது. இப்படத்திற்கான நிகழ்வில்தான் முதன்முதலாக ஸ்டோரிபோர்ட் ஓவியர்களை கௌரவித்தார்கள். அதே காலகட்டத்தில் வெளியான பல திரைப்படங்களில் ஸ்டோரிபோர்ட் ஓவியர்களுக்கான கிரடிட் முறையாக வழங்கப்பட்டதும் முக்கியமானது.


story board 1
story board 2
story board 3

சமகாலத்தில் கதைசொல்லும் முறைகள் மாற்றம் அடைந்ததை கிரகித்து அதற்கேற்றார் போல் வழக்கமாக பாணிகளை மாற்றியமைத்து புது அனுபவத்தை தர உழைத்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். இவருடன் ஸ்டோரிபோர்ட் ஓவியராக பணியாற்றியது பேரனுபவம்.

ஸ்டோரிபோர்டில் இருப்பதை அப்படியே எடுப்பது ஒரு முறை என்றால் அதை முதல் வடிவமாக எடுத்துக்கொண்டு மேலும் மெருகேற்றும் வண்ணம் காட்சியமைப்பது ஒரு முறை.

மணிரத்னம் அவர்கள் ஒரு முழுமையான திரைக்கதையைக் கொடுத்து அதற்கான சில தகவல்களைத் தந்து முழுவதுமாக சுயமாகவே சீன் கம்போஸ் செய்ய சொல்லியிருந்தார். பின் அதில் உள்ள பழைய பாணியை தவிர்த்து shot by shot மறு உருவாக்கம் செய்தார். பின் இறுதி வடிவத்தை பார்க்கும்போது மிக ஆச்சர்யமாகவும் புதுமையாகவும் இருந்தது. சில சவாலான ஷாட்களை அனிமேஷனாக மாற்றி வரைந்து தந்திருந்தேன். அதைப் பார்த்துவிட்டு அவர் பாராட்டியது மகிழ்ச்சியின் உச்சம்.

சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவு அவர்களிடம் “ KGF 2”, சல்மான்கான் நடித்த “Radhe”, போன்ற படங்களில் சண்டைக்காட்சிகள் ஸ்டோரிபோர்டாக பணியாற்றினேன். ஆக்சன் காட்சிக்காக வரைதல் என்பது சவாலானது மட்டுமல்ல சில நொடி காட்சிகளுக்கே பல ஃப்ரேம்கள் வரையவேண்டியிருக்கும். அதை முன்னோட்டமாக வரைவதென்பது மிக சுவாரஸ்யமான பணியாக இருக்கும்.

kgf2
storyboard final

2022 வெளியான குதிரைவால் மிகவும் வித்தியாசமான மாய யதார்த்தவாத வகை சார்ந்த அரிதான படத்திலும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதில் கதை முழுக்க இருக்கும் முக்கியமான காட்சிகளை ஒருங்கிணைத்து ஓவியமாக உருவாக்கியது. வித்தியாசமான அனுபவம். அதில் வழக்கமான ஓவியமரபிலிருந்து மாறுபட்டு பல கோணங்களில் multi perspective art எனும் பாணி வழியே ஓவியத்தை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

இப்படி வெவ்வேறு வகையான ஸ்டோரிபோர்டு முறைகளை இயக்குநர்கள் தத்தம் பாணியில் உருவாக்குவது தமிழ் சினிமா தொழிநுட்பத்தின் ஆரோக்கியத்தின் குறியீடாக பார்க்கிறேன். ஓ.டி.டி போன்ற பெரும் தயாரிப்பு நிறுவனங்கள் வருகைக்குப் பிறகு ஸ்டோரிபோர்டை முக்கிய அம்சமாக கருதுகின்றனர். ஓவியம் சார்ந்த படிப்புகளில் ஸ்டோரிபோர்டு பயிற்சிக்கு தனி இடம் உண்டு. ஓவியர்கள் பலர் ஆர்வத்தோடு கற்றுக்கொண்டு விளம்பர தயாரிப்பு நிறுவனங்களில் ஓவியராகப் பணியாற்றி ஸ்டோரிபோர்ட் வரைந்து வருகின்றனர். சரவணன், சந்திரன், பாரதி, எழில், ரகு என பல ஓவியர்கள் தமிழில் மட்டுமல்ல இந்தி, தெலுங்கு என இந்திய அளவில் பணியாற்றி வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மிக அதிகமான இன்றைய சூழலில் எல்லாவகையான ஓவியங்களை எளிதில் வரையக்கூடிய AI application மிகத்துல்லியமாக ஒரு ஸ்டோரிபோர்டை வரைவது கடினமே. ஏனெனில் ஒரு இயக்குநரின் சிந்தனையிலும் பல நாள் உழைப்பிலும்  உருவான திரைக்கதையை காட்சியாக தாங்கி நிற்கும் கனமான படைப்பு ஸ்டோரிபோர்ட். 

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கலைவடிவத்தை ஓவியத்திறமை மட்டும் வைத்து ஸ்டோரிபோர்டை உருவாக்கிவிட முடியாது. Perspective, Anatomy,180 Rules, Wide Shot, Mid Shot, Close Up, Extreme Close Up, Over the Shoulder, Rule of Third என பல பண்புகளை உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு காட்சியிலும் உடல் அசைவு, சூழலின் சத்தம், இடைவெளி, ஒளியமைப்பு, கேமிரா கோணம் மற்றும் அதன் நகர்தல் என பலதரப்பட்ட காரணிகள் பற்றிப் புரிதலே ஒரு நல்ல ஸ்டோரிபோர்ட் ஓவியருக்கான தகுதி. 

ஓவியர் Marcos Mateu-Mestre எழுதி வெளியிட்ட Framed Ink மற்றும் Framed Perspective  எனும் இரு நூல்கள் visual Storyteller களுக்கு மிக முக்கியமானது. 

Author Image

கோ. ராமமூர்த்தி

ஸ்டோரி போர்டு கலைஞர். ஓவியர். அயலான், சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு Concept Art வரைந்திருக்கிறார். மாறா, குதிரைவால், KGF 2, அயலான், ராதே, ஆச்சார்யா படங்களுக்கு ஸ்டோரி போர்ட் கலைஞராக பணி செய்திருக்கிறார். மாவீரன் படத்தில் இடம்பெற்ற காமிக்ஸ் ஓவியங்கள் இவர் வரைந்தவை. பிக்பாஸ், சூப்பர் சிங்கர் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும், விளம்பரங்களுக்கும் ஸ்டோரிபோர்ட் வரைந்திருக்கிறார்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
Adolescence

Adolescence – எதிர்கால நலன் கருதி

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?