The Talkie
Saturday, April 11, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home உரையாடல்

என் அனுபவங்களே என் எழுத்து

The Talkie by The Talkie
April 15, 2025
in உரையாடல்
A A
1
Bong_joon ho
Share on WhatsappShare on FacebookShare on Twitter
Author Icon காயத்ரி ஆர்.

“பாங் ஜூன் ஹோ நேர்காணல்”

மொழிபெயர்ப்பு காயத்ரி ஆர் .


பாங் ஜூன் ஹோ தென் கொரியத் திரைப்படமான The Parasite படத்தின் இயக்குநர். உலகத்தில் உள்ள அத்தனை திரைப்பட விரும்பிகளுக்கும் அறிமுகமானவர் இவர். வன்முறைக் காட்சிகளைக்கூட அதற்கான உளவியல் காரணத்தோடு இவரால் சொல்ல முடியும். நம்மை ஏற்றுக்கொள்ள வைக்கவும் முடியும்.  இவரது படமான Memoirs of Murder தென் கொரியாவில் 1980ம் ஆண்டுகளில் ராணுவ ஆட்சியின் கீழ் நடந்த தொடர் கொலைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இயக்குநர் ஹிட்ச்காக்கின் ரசிகர் இவர். ஒரு பேட்டியில் பாங் ஜூன் ஹோ இவ்வாறு சொல்கிறார்…“ ஹிட்ச்காக் ஒருமுறை சொன்னது நினைவுக்கு வருகிறது. மழையில், இரவில் ஏதோ ஒரு தனித்த இடத்தில் நடக்கும் கொலையை விட பட்டப்பகலில் நடந்துவிடும் கொலை த்ரில்லாக அமையும் என்று அவர் சொன்னது என் மனதில் நன்றாகப் பதிந்துவிட்டது. அடிக்கடி அது குறித்து நான் யோசிப்பேன். என்னுடைய படத்திலும் அதனுடைய பாதிப்பைப் பார்க்கலாம். இப்போது யோசித்துப் பாருங்கள், Memoirs of Murder படத்தின் முதல் காட்சியும், Parasite படத்தின் இறுதிக் காட்சியும் அதன் பாதிப்பு கொண்டவை எனத் தெரியும்” என்றார். 

இவருடைய அம்மா வழித் தாத்தா ஒரு நவீனத்துவ எழுத்தாளர். இவர் அந்தத் தாத்தாதவை சந்தித்ததில்லை. கொரியப் போரின் போது வடகொரியாவுக்கு அவர் சென்றிருந்தார். அப்போது இவரது குடும்பம் பிரிந்திருக்கிறது. கொரிய போருக்கு முன்பு இவரது தாத்தா புகழ்பெற்ற நவீன படைப்புகளை எழுதியிருந்தார்.  அவருடைய படைப்புகளை இவர் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தாத்தாவுடன் தனக்கு ஒரு தொடர்பு இருப்பதாக நம்புகிறார். இவரது அப்பா கிராபிக் டிசைனர். காமிக்ஸ் நாவல்களுக்கு படம் வரைபவர்.  அதனால் இயல்பாகவே பாங் ஜூன் ஹோவுக்கு கிராபிக்ஸ் நாவல் மீது தனி ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. ஓவியங்கள் வரைவதில் விருப்பம் கொண்டவர் இவர்.

ஓவியங்களில் இருந்த ஆர்வம் மெதுவாக எழுத்து நோக்கி இவருக்குத் திரும்பியிருக்கிறது.  திரைக்கதை எழுதுவதற்கான பயிற்சி இவரிடம் இல்லை என்றாலும், அதற்கான உந்துதலை அவர் பார்த்த படங்களில் இருந்தே பெற்றிருக்கிறார்.  இவருக்குள் சிறு வயதில் அதிர்வுகளை ஏற்படுத்திய படங்கள் The Psycho , Wages of Fear, Marathon போன்ற படங்கள். இது போன்ற திகில் படங்கள் அவருக்குள் அதிர்வை ஏற்படுத்திக் கொண்டே இருந்திருக்கின்றன. “இது நம்மை எதோ செய்கிறது” என்று தெரிந்து கொண்ட பின்தான் சினிமாத்துறை குறித்து தெரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்.

ஒரு படத்திற்கான திரைக்கதை உருவாக்கத்தை எழுதி எழுதியே கற்றுக் கொள்கிறார்.  இந்த நேர்காணலில் The Parasite படம் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார். இதோடு அவர் திரைக்கதை அமைக்கும் விதம் குறித்தும் பகிர்ந்திருக்கிறார்.

The Parasite படத்துக்கான யோசனை உங்களுக்கு எங்கிருந்து வந்தது? எது உங்களை இந்தக் கதையை எழுதத் தூண்டியது?

எல்லாக் கலைஞர்களையும் போல என் அனுபவங்கள்தான் இதற்கான தூண்டுதல். கல்லூரியில் படிக்கும்போது நான் மாணவர்களுக்குப் பாடமும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். கொரியாவில், கல்லூரியில் படித்துக்கொண்டே மற்றவர்களுக்குப் பாடம் எடுப்பது வழக்கம்தான். சில சமயம் பெரும் பணக்கார வீட்டுப் பையன்களுக்குப் பாடம் எடுக்கச் செல்வேன். ஒரு முறை அப்படி ஒரு வீட்டுக்குச் சென்றேன். இரண்டு மாதங்கள் வேலை செய்தேன். அதற்குமேல் வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தனர். பொதுவாக இம்மாதிரி பணக்கார வீடுகளின் அறைகளை நாம் பார்க்க முடியாது. ஆனால் அந்த வீட்டுப் பையனுக்கு அவர்கள் வீட்டை எனக்கு சுற்றிக் காண்பித்து தம்பட்டம் அடித்துக் கொள்ள ஆசையிருந்தது. அதனால் அந்த வீட்டைப் பார்க்க முடிந்தது. அந்த வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கும் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அந்நியர் ஒருவரின் வாழ்க்கையை வேவு பார்ப்பது போலிருந்தது அந்தத் தருணம். அவர்கள் வீட்டின் இரண்டாவது மாடியில் ஒரு நீராவிக் குளியல் தொட்டி இருந்தது, சினிமாவில் பார்த்ததைப்போல்! அதைப் பார்த்து எனக்கு அதிர்ச்சி. ‘வாவ்! நீராவிக் குளியல் தொட்டி! நம்பவே முடியவில்லை’ என்றேன். அந்தப் பையனுக்குப் பெருமை தாங்கவில்லை.

இந்தப் படம் கொரியாவைப் பற்றியும் அடித்தட்டு கொரிய மக்களைப் பற்றிய போராட்டத்தைச் சொன்னாலும் உலகளாவிய படமாக அமைந்திருக்கிறது. வேண்டுமென்றே இப்படி எடுக்கப்பட்டதா?

எனக்கும் இது அதிசயம்தான். இந்தப் படம் முழுக்க முழுக்க கொரியாவும் கொரிய உடல்மொழி கொண்ட நடிகர்களும் மட்டுமே. உலக ரசிகர்களுக்கு இந்தக் கதை புரியுமா என்ற கவலை எனக்கு இருந்தது. கான் (Cannes) திரைப்பட விழாவில் திரையிட்டபோது சிறுசிறு விஷயங்களைக் கூட மக்கள் ரசித்தது எனக்குப் புரியவில்லை. கான் மட்டுமல்லாது சிட்னி திரைப்பட விழா, ம்யூனிக், டெல்லுரைட், டொரண்டோ எல்லா இடங்களிலும் அதே எதிர்வினைதான். நம் நாடுகளுக்குள் எல்லைக்கோடுகள் அழிந்து போய் நாம் எல்லோரும் ஒரே நாட்டில் – அதாவது முதலாளித்துவம் என்ற தலைமையில்- வசிப்பதே காரணம் என்று நினைக்கிறேன்.

உங்கள் படங்கள் பாரம்பரியமாக வரும் அனைத்து விதிகளையும் மீறுகின்றன. இதைச் செய்ய வேண்டும் என்று எழுதும்போதே முடிவு செய்கிறீர்களா அல்லது நீங்கள் சொல்ல விரும்பும் கதையை அப்படியே சொல்கிறீர்களா?

சொல்ல விரும்பும் கதையைத்தான் சொல்கிறேன். நான் ஸ்கிரிப்ட் எழுதும்போது கதாபாத்திரங்களையும் சூழ்நிலைகளையும்தான் யோசிப்பேன். எழுத எழுத நான் எழுதாமல் அந்தக் கதை என்னை இழுத்துக்கொண்டு போகும். நான் தொனியை மாற்றுகிறேன் என்றும் பல ஜானர்களைக் கலக்கிறேன் என்றும் கருத்துக்கள் சொல்கிறார்கள். அந்தக் கருத்துகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருந்தாலும் உண்மையைச் சொல்லப் போனால் எழுதும் போதோ படமெடுக்கும்போதோ இதை மனதில் இருத்தி நான் செயல்படுவதில்லை. இரண்டு மணி நேரப் படம் முழுக்க ஒரே தொனியில்தான் இருக்க வேண்டும் என்று யாராவது கட்டாயப்படுத்தினால் அதுதான் எனக்கு மிகவும் கடினமான வேலை. இப்படியான தொனி மாற்றங்களும் ஜானர்களின் கலவையுமே எனக்கு எளிதாகக் கை கூடுகின்றன. 

படத்தில் வருகிற அந்த வெள்ள சீக்வென்சை எப்படி படமெடுத்தீர்கள்? எல்லாமே செட் தானா?

ஒரு ஏரியாவை இதற்காக முடிவு செய்து அங்கு வசிக்கும் அனைவரையும் இந்தப் படத்துக்காக அவர்கள் வீட்டை தியாகம் செய்யச் சொன்னோம். இதற்காகவே நீங்கள் இந்தப் படத்துக்கு ஆதரவு தர வேண்டும். (சிரிக்கிறார்) ஒரு பெரிய நீச்சல்குளத்தில் இதற்கான செட்டை அமைத்தோம். ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்பவர்களுக்கான பிரத்யேக குளம் அது. அதைச் சுற்றி வீடுகள் கட்டிப் படமெடுத்தோம். கடைசி இரண்டு நாட்கள் தண்ணீரை அழுக்காக்கினோம். தண்ணீர் அழுக்காகக் தெரிந்தாலும் அது சுத்தமான தண்ணீர்தான். மட்-பேக். மண்ணாலான மாஸ்க் அது. தண்ணீர் மிகவும் அழுக்காகத் தெரிந்தாலும் அது நடிகர்களுக்கு நல்லதாகத்தான் இருந்தது (சிரிக்கிறார்).

அந்த சீக்வென்ஸை எடுக்க உங்களுக்கு எவ்வளவு நாள் ஆயிற்று? ஏனென்றால் அதை நம்பவே முடியவில்லை.

பாங்: இரண்டு நாட்கள், இரண்டு இரவுகள்.

அந்த சீக்வென்ஸை படமாக்க கொரியாவில் நாங்கள் எல்லோரும் மிகத் தயாராக இருந்தோம். ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வளவு உயரம் தண்ணீர் மேலே பீய்ச்ச வேண்டும், எப்படி கழிவறையிலிருந்து நரகலும், தண்ணீரும் மேலே வர வேண்டும்,  அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும் என்றெல்லாம் சரியாக முடிவு செய்திருந்தோம். எல்லாப் படங்களுக்கும் நான் ஸ்டோரி போர்ட்டுகள் வரைந்து கொள்வதுண்டு. நான் படமாக்கிக் கொண்டு பிறகு வேண்டாதவற்றை நீக்குவதில்லை. என் ஸ்டோரி போர்டின்படியும், ஏற்கனவே தீர்மானித்திருந்த, சோதித்திருந்த கேமரா கோணங்களில் மட்டுமே நான் படமாக்குவதுண்டு. அதனால் நான் எடுத்த பெரும்பாலான காட்சிகளை நான் உபயோகப்படுத்த முடிந்தது. அவ்வளவாக வீணடிக்கவில்லை.

இந்தத் திரைப்படத்தில் சமூக வர்ணனைக்கு வரும்போது – உங்கள் SNOWPIERCER போன்ற பிற படங்களிலும் – வர்க்க அமைப்பு, முதலாளித்துவம் பற்றிக் கருத்து சொல்கிறீர்கள். பொதுவாக திரைப்படங்கள் அல்லது PARASITE போன்ற ஒரு திரைப்படம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறீர்கள்? அது விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறீர்களா? அவர்கள் வாக்களிக்கும் விதத்தை இது பாதிக்கும் என்று நம்புகிறீர்களா? இது போன்ற ஒரு திரைப்படத்தின் தாக்கம் இன்று எப்படி இருக்கும் என்று நம்புகிறீர்கள்?

உலகத்தை சிறந்த இடமாக மாற்ற நான் திரைப்படங்கள் எடுப்பதில்லை. நான் சினிமாவின் அழகை நேசிக்கும் ஒருவன். ஒரு திரைப்படம் உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தால் நல்லதுதான். ஆனால் நான் திட்டமிட்டு, ஒரு குறிப்பிட்ட இலக்குடன் ஒரு படத்தை ஒருபோதும் தொடங்குவதில்லை. நமது அன்றாட வாழ்வில் நமது நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது, சாப்பாட்டைப் பற்றி, காதலைப் பற்றி, டிரம்பைப் பற்றி, பொருளாதார நெருக்கடியைப் பற்றிப் பேசுவோம். இப்படி தினசரி வாழ்க்கையே அரசியலுடன் பிணைந்திருக்கிறது. நான் கவனம் செலுத்துவது எல்லாம் எப்படி அழகாக படமெடுப்பது என்பதிலும், தனி மனித அன்றாட வாழ்க்கையிலும்தான். இதில் அரசியல் கலந்துதான் இருக்கும். அவை இரண்டையும் பிரிப்பது எனக்கு சரியாகப் படவில்லை.

இந்தப் படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் அருமையாக நடித்திருந்தார்கள். எந்தக் கதாபாத்திரத்திற்கு நடிகர் கிடைக்க எளிதாக இருந்தது, எதற்குக் கடினமாக இருந்தது?

உண்மையில் ஆரம்பத்திலிருந்தே, அதாவது நான் திரைக்கதை எழுதத் தொடங்குவதற்கு முன்பே மூன்று நடிகர்களை – ஏழை அப்பாவாக, அவரின்  மகனாக, வீட்டைப் பார்த்துக் கொள்ளும் பெண்மணியாக நடித்த Song Kang-ho, Choi Woo-shik, and Lee Jeong-eun, இவர்களை மனதில் வைத்துக்கொண்டே எழுதினேன். அதுவும் அவர்களின் முகபாவம், உடல் மொழி, பேசும் விதம் ஆகியவை மனதினுள் ஓடிக்கொண்டே இருந்தது. ஏழை மகளாக நடித்த Park So-dam, ஏழை மகனாக நடித்தவரைப் போலவே இருந்ததால் அவரை நடிக்க வைக்க முடிவு செய்தேன். கிட்டத்தட்ட திரைக்கதையை எழுதி முடிக்கும் போதுதான் அவரை அணுகினேன்.  நிஜமான சகோதர சகோதரியைப் போல் அவர்கள் இருந்தனர். அவர்கள் இருவரின் முகமும் அருகருகே இருக்க இந்தப் படம் ஆரம்பமாகும். 

மிகவும் சவாலான பாத்திரங்களாக இரண்டு இருந்தன. ஒன்று, பணக்கார இல்லத்தரசியாக நடித்த Cho Yeo-jeongன் கதாபாத்திரம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலுள்ளவர்களுக்கு இவரைப் பற்றித் தெரியாது. சோ யோ-ஜியோங் எப்போதும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பவர். இது போன்ற ஒரு வேடத்தில் அவர் நடித்ததில்லை. அதனால் இங்குள்ள மக்களுக்கு அவருடைய மற்றொரு பக்கத்தைக் கண்டு ஆச்சரியம். நான் கடைசியாக அணுகிய நடிகர் Park Myung-hoon, ரகசிய நிலவறையில் இருப்பவராக நடித்தவர். அது மிகவும் சவாலான கதாபாத்திரம். ஆனால் பொதுமக்களுக்கு நன்கு பரிச்சயமானவராக இருக்கக்கூடாது என்று நினைத்தேன். அவர் ஒரு நாடக நடிகர். அவருடைய சில படங்களைப் பார்த்து அவரை நடிக்க வைத்தேன்.

Song Kang-hoவுடன் உங்களுக்கு இது நான்காவது படம். அவரிடம் உங்களுக்கு அப்படியென்ன பிடித்திருக்கிறது? உங்கள் இருவருடைய நட்பும் எப்படி உங்கள் வேலையில் உதவி செய்கிறது?

பாங்: நான் என்னை ஒரு குறிப்பிட்ட ஜானர், ஒரு குறிப்பிட்ட பாணியில் படமெடுப்பதாகக் கருதுகிறேன். நான் எடுக்கும் பல படங்கள் மரபை உடைக்கின்றன. யதார்த்தத்துக்கும் ஒரு குறிப்பிட்ட வகையின் கூறுகளுக்கும் முன்னும் பின்னுமாக செல்கின்றன – இது கிட்டத்தட்ட கயிறில் மேல் நடப்பது போன்றது. Song Kang-ho என்ற இந்த நடிகரால்தான் இந்த வேலை சாத்தியமாகிறது என்று தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட காட்சி அல்லது தருணம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அவரால் அதை யதார்த்தமாகச் செய்ய முடியும். மக்களை நம்ப வைக்க முடியும். மற்ற கொரிய படங்களில், Song Kang-ho  சூப்பர் ஹீரோவாக நடித்தாலும் என் படங்களில், எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும் ஒரு பாவப்பட்ட மனிதராகவே நடிக்க வேண்டியிருக்கிறது (சிரிக்கிறார்).

உங்களால் ‘வழக்கமான‘ ஹாலிவுட் படங்கள் எடுக்க முடியுமா?

HOST திரைப்படம் கான் மற்றும் டொரண்டோவில் 2006ஆம் வருடம் திரையிடப்பட்டபோது, பல அமெரிக்க ஏஜென்சிகள் என்னைத் தொடர்பு கொண்டன. SNOWPIERCER படத்துக்குப் பிறகு எனக்கு வேறொரு முகவர்  மாறினார். என் பழைய முகவர் அற்புதமானவர். பல ப்ளாக்பஸ்டர் படங்களையும் ஃப்ரான்சைஸ்களையும் இயக்க வாய்ப்புகள் கொண்டு வந்தார். ஆனால் உண்மையை சொல்லப் போனால் எனக்கு பயம் அதிகம். இதுவரை எனக்கு நல்ல அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது. டைரக்டர்ஸ் கட் தான் எப்போதும் என் படங்களின் இறுதிப் பதிப்பாக இருந்திருக்கிறது. திரையரங்கப் பதிப்பு (Theatrical version) ஒன்றும், பிறகு டைரக்டர்ஸ் கட்டை வேறொரு டிவிடியாகவும் வெளியிடுவதில்லை. என்னிடம் என் படங்களின் ஒரே ஒரு பதிப்புதான் இருக்கும். பெரிய பட்ஜெட் படங்களை செய்தால் எனக்கு சுதந்திரமில்லாமல் போய்விடுமோ என்பதுதான் பயம். என்னால் அப்படி வேலை செய்ய இயலாது. அப்படிப் பெரிய படங்களை செய்வதை விட சுதந்திரமாக, யாருடைய தலையீடும் இல்லாமல் சின்ன பட்ஜெட் படங்கள் செய்வதையே நான் விரும்புகிறேன். 

Parasite க்குப் பிறகு உங்களுடைய அடுத்த படம் என்ன? வேறு ஜானர்களை முயற்சி செய்து பார்க்கப் போகிறீர்களா?

பொதுவாக ஒரு படத்துக்கான ஐடியாக்களை பல மாதங்களுக்கு, வருடங்களுக்கு முன்னரே மனதில் யோசனை செய்து உருவேற்றுவேன். PARASITE படம்  2013லேயே ஆரம்பித்துவிட்டது. இப்போது இரண்டு படங்களின் வேலை நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் இவற்றின் வேலையை இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னாலேயே தொடங்கி விட்டேன். ஒன்று கொரிய மொழியில் இன்னொன்று ஆங்கிலத்தில். PARASITE மற்றும் MOTHER படங்களோடு ஒப்பிடும்போது இவை சிறிய பட்ஜெட் படங்கள் தாம். இந்தக் கொரிய மொழிப் படத்தின் கதையை 2001ன்றிலிருந்து  யோசித்துக்கொண்டிருக்கிறேன். சீக்கிரமாக இந்தப் படத்தை நான் எடுக்காவிட்டால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும் (சிரிக்கிறார்). 

நீங்கள் படப்பிடிப்புத் தளத்தில் எப்படி இருப்பீர்கள்? நடிகர்களிடம் கடுமையாக நடந்து கொள்வீர்களா அல்லது சிரித்துக் கொண்டு வேலை வாங்குவீர்களா அல்லது இரண்டுமேவா?

படப்பிடிப்புத் தளத்தில் நடிகர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்களுக்கு எல்லாம் சுலபமாக வசதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். எங்கள் குழுவில் உள்ள அனைவரும், நான் உட்பட, ஸ்டோரிபோர்டை கையில் எப்போதும் வைத்துக்கொண்டிருப்போம். அதன்படியே படத்தை ஷூட் செய்வதால் மற்றவரிடம் சண்டை சச்சரவு செய்யும் நிலைமை வராது. ஒரே ஒரு விஷயத்தில்தான் நான் கடுமையாக நடந்து கொள்வேன். “இன்னிக்கு என்ன சாப்பாடு?’ என்று கேட்டபடி இருப்பேன்.  (சிரிக்கிறார்)

சாப்பாட்டைப் பற்றிப் பேசுவதால் ஒன்று கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன். பீச் பழத்தைப் பற்றிக் கேட்க நினைக்கிறேன். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு பீச் பழத்தை முன்புபோல் பார்க்க முடியவில்லை. உங்களுக்கு எப்படி இந்த ஐடியா வந்தது?

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது தோழர்களுடன் சுற்றுலா சென்றிருந்தேன். அப்போது ஒருவன் தனக்கு பீச் பழம் அலர்ஜி என்று சொன்னான். அவன் கிண்டல் செய்கிறான் என்று நாங்கள் நினைத்தோம். யாரோ ஒருவர் பீச் பழம் ஒன்றை அவனை நோக்கி வீச, அது அவன் மேல் படாமல் தள்ளி விழுந்தது. ஆனால் அதற்கே அவனுடைய கை அடர்சிவப்பாக மாறியது. அதைப் பார்த்ததும் நாங்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தோம். மனிதர்களுக்கு விதவிதமான ஒவ்வாமை உண்டு. எனக்கு மட்டிமீன் ஒவ்வாது. ஆனால் சினிமாவுக்கு பீச் பழ அலர்ஜி சரியாக இருக்கும் என்று நினைத்தேன். யாருக்கும் தெரியாமல் தெளிக்க முடியும் என்பது கதைக்குப் பொருந்திப் போனது.

ஏன் PARASITE என்று ஒருமையில் தலைப்பு?  PARASITES என்று பன்மையில் தானே இருந்திருக்க வேண்டும்?

எங்கள் குழுவின் ஒரு சந்திப்பின் போது தலைப்பில் ஒரு S ஐ தலைப்பில் அடைப்புக் குறியில் சேர்த்துக் கொள்ளலாமா என்று நினைத்தோம் – PARASITE(S). ஆனால் அது ரொம்பப் பாசாங்காக இருப்பதுபோல் தோன்றியது. கதைப்படி அந்த ஏழைக் குடும்பம், பணக்காரக் குடும்பம் (ஏழைகளிடம் வேலையை உறிஞ்சுவது), அந்த வீட்டில் ஒட்டுண்ணியாகவே வாழும் ஒரு குடும்பம் என பல Parasites இருப்பதால் தலைப்பை எளிமையாக வைத்துவிடலாம் என முடிவு செய்தோம். 

ஒரு எழுத்தாளராக உங்களது பயணத்தில் எதை நீங்கள் நல்ல ஐடியாவாக நினைப்பீர்கள்? எந்த மாதிரியான ஐடியாக்களைக் கொண்டு திரைக்கதை அமைப்பீர்கள்?

இதுவரை நான் எழுதிய ஏழு படங்களுக்கும் நான் எப்படி எழுதத் தொடங்கினேன் என்று பொதுவாக சொல்லிவிட முடியாது. உதாரணம் Dog Barks படத்தினைப் பார்க்கலாம். அது தான் என்னுடைய முதல் படம். நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு ஆடம்பரமான அபார்ட்மென்ட் வாசலில் ஒரு நாய் பாதி உடல் எரிக்கப்பட்டு இறந்து கிடந்தது. அது எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அந்த ஞாபகம் இருந்து கொண்டிருந்தது.

எனக்கு கல்யாணம் ஆன புதிதில் என் மனைவியுடன் தங்கியிருந்த அபார்ட்மெண்ட்டில் தான் இதன் படப்பிடிப்பை நடத்தினேன். அதனால் இந்தப் படத்தில் அபார்ட்மெண்ட் தவிர்க்க முடியாத அங்கமாகி பல்வேறு விவரணைகளுடன் இருக்கும். இதில் குப்பைகளைக் கொட்டுகிற விதம் கூட என்னுடைய அனுபவத்தில் இருந்து தந்தது தான்.

அப்போது என்னுடைய தம்பி பேராசிரியர் பணிக்காக வேலை தேடிக் கொண்டிருந்தான். இந்த மூன்றும் சேர்ந்துதான் கதையாக உருவெடுத்தது.

என்னுடைய அனுபவங்கள், நான் பார்த்த காட்சிகள் இவையெல்லாம் என் மனதின் மூலையில் சேகரித்து வைத்திருக்கிறேன். அவை தேவைப்படும்போது தாமாகவே முன்வந்து நிற்கின்றன. அநேகமாக எல்லா எழுத்தாளர்களுக்கும் இப்படித்தான் என்று நினைக்கிறேன்.

கதையில் இருந்தும் Plotல் இருந்தும் கதாபாத்திரத்தை நான் பிரிப்பதில்லை. சிச்சுவேஷனுக்குள் சீக்கிரமாக சென்றுவிடுவேன். பல வருட காலங்களாக அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது எனக்கு முக்கியம் இல்லை. கதைக்குள் கேரக்டர்களைக் கொண்டு வரும்போதே அவர்கள் யார் என்பது தெரிந்துவிடும். அதனால் கதையின் ஆக்ஷனில் ஃபோகஸ் செய்வேன். இதுதான் சரியான எழுத்து முறை என்று நான் சொல்ல மாட்டேன். நான் எப்போதுமே ஒரு கதையில் சரியான ஆக்ஷன் மிக முக்கியம் என்று நினைப்பேன். அதே நேரம் கதாபாத்திரங்கள் நிச்சயமற்றத் தன்மையாக மாறும் அபாயமும் இருக்கிறது என்பதையும் அறிவேன்,

புற கதாபாத்திரங்கள், அதாவது சில காட்சிகளில் சில கதாபாத்திரங்களைப் பார்ப்போம்…அவர்கள் காட்சிக்குள் நடந்து வருவார்கள். உதாரணத்துக்கு Parasite படத்தில் வருகிற ஒரு குடிகாரர். இவர்களைப் போன்றவர்களை உருவாக்குவதின் காரணம், அவர்களை எப்படி முக்கிய கதாபாத்திரங்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதற்காகவா?

டாம் ஹாங்க்ஸ் நடித்த CAST AWAY படத்தினைத் தவிர மற்ற எல்லாப் படங்களிலும், கதாபாத்திரங்கள் உருவாக்கப்படுவதே ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதற்காகத் தான். Parasite படத்தினை ஒட்டுமொத்தமாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இந்தக் குடும்பம் எப்படிப் பேசுகிறது ஒருவருக்கொருவர் எப்படி தொடர்புகொள்கிறார்கள் என்பதை வைத்து அவர்களின் ஆளுமையை புரிந்து கொள்ள முடியும். அதை வைத்து தான் மொத்த கதையும் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு குடிகாரனை வைத்து நான்கு பேரும் பேசிக்கொள்ளும்போது அவர்களை நாம் வகைப்படுத்திக் கொள்ள முடியும். ஏனெனில் இந்தக் காட்சிக்குப் பிறகு கதையில் அடுத்தடுத்து சம்பவங்கள் நிகழும்.   

நீங்கள் எந்த நேரத்தில் எழுதுவீர்கள்? எப்படி எழுவீர்கள்?

நான் சீக்கிரமாகத் தூங்கி சீக்கிரமாக எழுந்துவிடுவேன். 5.30மணிக்கு எழுந்து ஃபிரிட்ஜில் ஏதாவது இருக்கிறதா என்று நோட்டமிடுவேன். என்னுடைய நகரத்தில் எனது வீட்டின் அருகில் நல்ல கஃபேக்கள் இருக்கின்றன. எப்போதுமே ஒரு கஃபே அல்லது காபி ஷாப்பில் ஸ்க்ரீன்ப்ளே எழுதுவதை நான் விரும்புவேன். காலை நேரத்தில் அமைதியான இடத்தில் அமர்ந்துகொண்டு எழுதுவதற்கு எனக்குப் பிடிக்கும். 


Author Image

காயத்ரி ஆர்.

ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர். காயத்ரி ஆர். – எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பிரெஞ்சு மொழி பேராசிரியை. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
oscar part02

ஆஸ்கர் 2025 – பாகம் இரண்டு

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?