கவிதைக்காரன் இளங்கோ
திரைப்படங்களின் வெற்றி தோல்விகளை நிதர்சனமாக தீர்மானிப்பது எது? இது ஒரு Hypothetical கேள்வி. அனுமானங்கள் என்பவை ஏற்கனவே பெற்ற அனுபவங்களையொட்டி உருவாகுபவை. காலம்காலமாக நடப்பதும் அதுவே.
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா, ஏறக்குறைய தமிழ்ச்சமூகத்தின் அன்றாடத்தோடு பிணைந்திருக்கிறது. அப்படி பார்க்கும்போது சமூக நடப்புகளிலிருந்து சினிமாவிற்கும் சினிமாவிலிருந்து தனிநபர் நடத்தைக்கும் என அதிலொரு மும்முனை உள்ளது. பண்பாடு மற்றும் கலாச்சார பின்னணிகளோடு ஒன்றியுள்ள வெவ்வேறு வாழ்க்கையின் சாரங்கள், மாற்று சிந்தனைகள், முற்போக்குகள், தொழில்மயமாகிவிட்ட நவீனத்தால் உருவாகியிருக்கின்ற தலைமுறை வித்தியாசங்கள், உலகமயமாகியுள்ள இன்றைய பெருநகர பழக்க வழக்கங்களின் நீக்கு போக்குகள் என ஒன்றுக்கொன்று முரண்பட்டும் போயிருக்கின்ற தற்போதைய சூழலில் தமிழ் சினிமா ரசனையை முற்றிலும் மாற்று கோணத்தில் அலசியாக வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.
2024-இல் வெளியான படங்களை முன்னிறுத்தி நான் இந்தக் கட்டுரை எழுதியிருக்கிறேன். வாழை, கொட்டுக்காளி, ஜமா, மெய்யழகன், லப்பர் பந்து, நந்தன், போகுமிடம் வெகுதூரமில்லை, பேச்சி, நீல நிறச் சூரியன், ஜில்லு, போன்ற படங்களும் GOAT, வேட்டையன், டிமான்டி காலனி-2, ஹிட்லர், மழை பிடிக்காத மனிதன், பி.டி.சார், கடைசி உலகப் போர் போன்ற படங்களும் மக்களிடம் போய் சேரும்போது கிடைக்கின்ற ரிசல்ட் இரண்டு விதமாக பார்க்கப்படுகிறது. ஒன்று, பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் எனப்படுகிற வசூல் சம்பந்தப்பட்டது. இது பெரும்பாலும் ஹீரோக்களுக்கு இருக்கிற சந்தை மதிப்பை பொறுத்தது. இன்னொன்று, கதை அம்சத்திலும் அது சொல்லப்பட்ட விதத்திலும் அனைத்து பார்வையாளர்களையும் சென்றடைவது.
இரண்டு வகை திரைப்படங்களுக்கும் இருப்பவர்கள் ஒரே பார்வையாளர்கள் தாம். அவர்களால் இரண்டுவிதமாகவும் எப்படி ரியாக்ட் பண்ண முடிகிறது? அது ஒரு விந்தை. அவர்களின் ரசனை மட்டத்தை எந்தக் கோணத்திலிருந்து குறி வைத்து படம் எடுப்பது? இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் இருக்கிற கெட்டிக்காரத்தனத்தை பல்ஸ் பிடித்து அறிவது கடினம்.
இயக்குநருக்கும் சரி, படத்தைத் தயாரிக்க முன்வருகிற தயாரிப்பாளருக்கும் சரி.. அவர்களின் முன்னே இருக்கிற ஒரே கேள்வி இதுதான். Who is your audience? ஒரு கதைக்கான புள்ளியை அங்கிருந்துதான் தொடங்கியாக வேண்டும். பார்வையாளர்களுக்கு படம் பிடித்துப் போகும் என்பது ஒரு நம்பிக்கை. அது ஒரு எப்போதுமே ஒரு பரிசோதனை முயற்சி. இதில், கணிப்புகளின் விளைவுகளுக்கு 50-50 வாய்ப்புண்டு.
‘முன்ன மாதிரி இப்ப வர்ற படங்கள் இருப்பதில்லை’ என்கிற குரல் ஒலிப்பதையும் கேட்க முடிகிறது. திரைப்படங்கள் அந்தந்த காலகட்டத்தின் வாழ்க்கையை எதிரொளிக்க முயல்கின்றன. பார்வையாளன் அதில் தன்னை கொஞ்சமாவது அடையாளங்கண்டுகொள்ள விரும்புகிறான். சமூக அடுக்குகளில் உள்ள மேலோட்டமான விஷயங்களைத் தொட்டுக் காட்டிவிட்டு உணர்வுப்பூர்வமாக முடிந்துவிடுகிற கதைகளில் எதனை வலியுறுத்த யத்தனிக்கிறோமோ அதில் வெற்றிப் பெற்றுவிட வேண்டும் என்கிற துடிப்பை காட்சிகளாக அமைப்பதில் ஓர் இயக்குநருக்கு பெரிய வேலை இருக்கிறது என்று நம்பலாம்.
வெகுஜன ரசனையை குறி வைத்து எடுக்கின்ற படங்களுக்கு காலம்காலமாக மக்களிடையே வரவேற்பு இருக்கிறது. அப்படியாக, பொதுபுத்தியில் எந்தெந்த விஷயங்கள் ஆழமாக பதிந்துள்ளதோ அதனை பிரதிபலிக்கிற சினிமா உடனடியாக போய் சேர்ந்துவிடுகிறது. வெகுஜனம், சினிமாவை ஒரு பொழுதுபோக்கு துறையாக எப்போதோ தீர்மானித்துவிட்டதால் அதை மறுப்பதற்கில்லை. அவர்களுக்கான சினிமாவில் தோன்றுகிற கதாநாயக நாயகி பிம்பங்கள் அசல் வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டு செய்கின்ற அத்தனை நடவடிக்கைகளும் அவர்களுக்கு ஏற்புடையதே. கனவுக்காட்சிகளும் வீரம் நிறைந்த சண்டைக்காட்சிகளும் கொண்டாடப்படுவது அதனால்தான். அக்காட்சிகளுக்காக பெரிய பொருட்செலவும் செய்யப்படுகிறது.
‘போட்ட பணத்தைவிட அதிக லாபம் ஈட்டிவிடலாம்’ என்கிற ஐடியா சந்தை நிலவரமாகவும் மாறுவது அப்படித்தான். பெரிய படங்கள் என்று அடையாளப்படுத்தப்படுகிற படங்கள் விடுமுறைகளை குறிவைத்து தயாரிக்கப்படுகின்றன. அது பெரும்பாலும் பண்டிகை விடுமுறைகள் அல்லது பள்ளி விடுமுறைகளாக இருக்கும். அது, மக்களின் செலவு சக்தியை கோருகிற கன்ஸ்யூமிங் சைக்காலஜி. திருவிழாவிற்கு கிளம்பிவிடுகிற உற்சாகத்தோடு திரையரங்கை நோக்கி அவர்களும் வரத் தொடங்கிவிடுவார்கள். இன்று, பெரிய ஸ்டார்களின் படங்களைப் தொடக்க நாட்களிலேயே பார்த்துவிடுவது என்பது ‘டிரெண்ட், வைப்’ என்பதாக மாறியிருக்கிறது. அதிலுள்ள பணப்புழக்கத்தின் வீரியம் அசாதாரணமான ஒன்றாகும்.
முன்னர், திரையரங்குகள் குறைவு. அதனால் காட்சி எண்ணிக்கைகளும் குறைவு. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் கேளிக்கைக்கான நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. முதலில் ரேடியோ இருந்தது, அடுத்து டி.வி வந்தபிறகு பாடல்களை, திரைப்படங்களைப் பார்க்கலாம். ஆனால், அதெல்லாம் திரையரங்குகளுக்கான பதிலியாக இருந்ததில்லை. இன்றோ, உள்ளங்கைக்குள் அடங்குகிற சட்டக வடிவத்தில் திரைப்படங்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுவிடுகின்ற வாய்ப்பு வந்துவிட்டது.
ஒருமுறை எழுத்தாளர் சுஜாதா சொல்லியிருந்தார். வருங்காலத்தில் பெரிய திரையரங்குகள் குறைந்துவிடும். மாற்றாக சிறிய அரங்குகள் வந்துவிடும். ஒரு திரைப்படத்தை பலரும் பல இடங்களில் இருந்துகொண்டு ஒரே சமயத்தில் பார்க்கமுடியும் என்றார். சென்னையின் கானாத்தூரில் முதன்முதலாக மாயாஜல் ‘மல்டிபிளக்ஸ்’ 16 திரையரங்குகளுடன் அமைக்கப்பட்டது. இப்போது ஒவ்வொரு மணிநேர வித்தியாசத்தில் ஒரே திரைப்படம் அடுத்தடுத்த அரங்குகளில் திரையிடப்படுகின்றது. அதற்கு ஒரே காரணம், க்யூப் தொழில்நுட்பத்தில் உருவான டிஜிட்டல் சினிமாவின் ப்ரொஜக்-ஷன் முறை.
தமிழ் சினிமாவுக்கான பார்வையாளர்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள். ரிலீசாகிற திரைப்படத்தை ஒரே சமயத்தில் அனைவரும் பார்த்துவிடலாம் என்கிற வசதியால் காட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன. இந்நிலையில் உச்ச நடிகர்களின் படங்கள் முதல் நாளே ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும்போது எடுத்த எடுப்பிலேயே லாபக் கணக்கு தொடங்கிவிடுகிறது. எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்துவிட்டால் அடுத்தடுத்து நாட்களில் மிகப்பெரிய வசூலை எட்டிவிடும். இல்லையென்றால் நஷ்டக் கணக்கு. முன்பு போல 50வது நாள், 100வது நாள், சில்வர் ஜூப்ளி எனக் காத்திருக்க வேண்டியதில்லை. அதனால்தான் இப்போதெல்லாம் வெற்றிகரமான 15வது நாள் என்கிற புதிய போஸ்டர்களை காண்கிறோம்.
இவற்றை மனத்தில் வரிந்துகொள்ளாமல் வெறுமனே ஒரு படத்தின் வெற்றித் தோல்விக்கான பின்னணிகளையோ மக்களின் இன்றைய ரசனையையோ அனுமானித்திட முடியாது.
முன்னதாக நடிகர் விஜய் வெளியிட்ட அறிவிப்பின்படி GOAT அவருடைய கடைசி படம். அதைத் திரையரங்கில் பார்த்துவிடவேண்டும் என்கிற ஆவலை ரசிகர்களுக்கு உருவாக்கிவிட்டது. படத்தில் முக்கியமான வில்லன் வேடத்தை விஜய் ஏற்றிருந்ததும் மற்றும் விஜய்யின் இளமைத் தோற்றமும் ஒரு Theatrical experience-ஐ நோக்கி மக்களைத் திரளச் செய்தது. கூடுதலாக இயக்குநர் வெங்கட் பிரபு மீதுள்ள நம்பிக்கை. ஏற்கனவே நன்கு பரிச்சயமான மற்ற நடிகர்களை ஒருங்கிணைத்திருந்தது என அனைத்துமே ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.
ஒரு ஹீரோயிஸமான படத்துக்குரிய கதைக்களத்தை தேர்ந்துவிட்டு சுவாரசியமான காட்சிகளோடும் சற்றே கணிக்கக்கூடிய திருப்பங்களோடும் குறைவான லாஜிக்குகளையும் வைத்துக்கொண்டு மூன்று மணிநேர அளவிற்கு ஒரு திரைக்கதையை அமைத்து படம் எடுத்துவிட முடியும் என்பதற்கு GOAT ஒரு சமீபத்திய உதாரணம். அதிலுள்ள துணைக் கதாபாத்திரங்களின் குணாம்சங்களை (Characterization) பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. அவற்றின் நியாய அநியாயங்களோ காரணக் காரியங்களோ ஜஸ்ட் லைக் தட் எளிமையானதாக இருந்தாலே போதுமானது. அவை, திரைக்கதையின் வேகத்திற்கும் திருப்பத்திற்கும் துணைபுரிவதற்காக எழுதப்படுபவை. அது அப்படித்தானே இருக்கும் என்று ஒத்துக்கொள்ளும் மனநிலையில் தயாராக இருக்கும் ரசிகர்களை மனத்தில் கொண்டு உருவாக்கப்படுகின்றது. ஒவ்வொரு இருபது நிமிடத்திற்கும் ஓர் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்திட வலுவான காட்சிகள் இருந்தால் போதும் என்று நினைத்திருக்கிறார்கள்.
இதே விஷயங்களை மற்ற படங்களில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதிலுள்ள லாஜிக் நெருடல்களை பல கோணங்களில் இருந்தும் அணுகுவார்கள். அதையெல்லாம் மீறி எமோஷனல் தருணங்கள் உருக்கமாக இருந்து, மனமும் ஒன்றிப் போய்விட்டால் அவர்களையறியாமலேயே அந்தப் படத்தை வெற்றிப் படமாக மாற்றுவார்கள். வாழை, லப்பர் பந்து போன்ற படங்களுக்கு நேர்வது அதுதான்.
வாழை படத்திற்கு இயக்குநருக்கான அடையாளம் உள்ளது. அதுவோர் எதிர்பார்ப்பு. எளிமையான நடிகர்களை வைத்துக்கொண்டு எழுதப்பட்ட திரைக்கதையை படமாக்குமிடத்தில் மையக்கதையின் அம்சத்தை இயக்குநரின் முந்தைய பாப்புலாரிட்டியோடு அணுகும்போது கிடைக்கின்ற அனுபவங்கள் தனி ரகம். முதலாளி தொழிலாளி என்கிற வர்க்க வேறுபாட்டையும் உழைப்புச் சுரண்டலையும் அதனால் பதின்பருவ சிறுவனின் அன்றாடங்கள் அடையக்கூடிய உணர்வுபூர்வமான தாக்கத்தையும் வாழை காட்சிப்படுத்துகிறது. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையைக் கொண்ட திரைப்படம் என்பதாலும் கதையின் துயரமும் நடந்த சம்பவத்தின் அவலமும் பார்வையாளரின் மனத்தில் ஒரு முன்தயாரிப்பை, ஓர் அதிர்ச்சியை நோக்கமாக கொண்டிருப்பதால் அதன் வெற்றி பரவலாகியது.
லப்பர் பந்து, இயக்குநர் தமிழரசு பச்சமுத்துவுக்கு முதல் திரைப்படம். எளிமையான, அனுமானித்துவிட முடிகிற திரைக்கதை அமைப்பாக இருந்தாலும் சின்னச் சின்ன காட்சிகளில் இருந்த நெகிழ்வான தருணங்களில் பார்வையாளனை தன்வசப்படுத்திக்கொள்ளும் உத்தியில் அவர் நம்பிக்கை வைத்திருந்தது வீண்போயிருக்கவில்லை. ஆனால், கதையம்சத்தின் பின்னணியில் உள்ள சாதிய நிலைப்பாடு அழுத்தம்திருத்தமாக கையாளப்படவில்லை. அது மேலோட்டமாக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. தீவிரத்தன்மையைத் தொடவில்லை. கதாநாயகன், காதலியின் அப்பா என்கிற இரண்டு தனிப்பட்டவர்களுடைய மனம் தத்தம் ஈகோவின் மீது பயணிக்கிற போக்கை கிரிக்கெட் காட்சிகளும் அதிலுள்ள சண்டைச் சச்சரவுகளும் மையப்படுத்துகின்றன.
ஆனால், அதிகம் கவனிக்கப்படாத ‘நந்தன்’ திரைப்படம் சாதியின் பெயரால் நடக்கும் அநியாயங்களை காத்திரமாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. அதிகாரம் என்கிற போதை காலம்காலமாக யாருக்கானது என்கிற ஓர் ஆண்டையின் மனநிலையை கண்முன்னே திரைக்காட்சிகளாகப் பார்க்கிறோம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பஞ்சாயத்து ரிசர்வ் தொகுதியில் வெற்றி பெற்றாலும் ‘ஊராட்சி மன்றத் தலைவர்’ என்கிற அதிகாரத்தை முறையாக வழங்க மறுக்கிற, வெற்றி பெற்றவருமே கூட அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் போகிற நிலைமைகளை, சக மனித உளவியலை என பல உண்மைச்சம்பவங்களின் அடிப்படையிலிருந்து காட்சியாக்கியிருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன். தமிழ்ச்சமூகத்தை நோக்கி இப்படம் எழுப்புகின்ற கேள்வி உண்மையில் யாரை நோக்கி என்பதன் மூலமாக ஒரு கவனத்தை ஏற்படுத்துகின்றது.
‘கடைசி உலகப் போர்’ திரைப்படம், ஒரு உடோபியன் புனைவு முயற்சி. ஹிப்ஹாப் தமிழா ஆதி தயாரித்து, எழுதி, இயக்கி நடித்திருக்கிறார். 2028-ஆம் வருடத்தில் ஓர் உலகப் போர் நடந்தால் என்னென்ன தாக்கங்களை உருவாக்கும் என்கிற உலக அரசியல் பின்னணியிலிருந்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை, சட்டென மாறிப்போகும் மாநில அரசியலின் முகம் என அதிமுக்கியமான ஒரு யூகத்தை கையாண்டிருக்கிறார்கள். இதில் இலங்கை, சீனா என்கிற இருமுனை சந்தர்ப்பவாதங்கள் இந்நிலத்தின் மீது ஏற்படுத்த வாய்ப்புள்ள தாக்கத்தை தொட்டிருக்கிறார்கள்.
இதே போலத்தான் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்த டிமான்டி காலனி-2 படமும் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாகியிருந்த இரண்டு படங்களான ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘ஹிட்லர்’ போன்ற படங்கள். அவர்களின் முந்தைய சில படங்கள் நன்கு ஓடி கவனத்தை ஈர்த்து, வசூலையும் பெற்றிருப்பதால் பார்வையாளர்களின் பட்டியலில் அப்படங்கள் இருக்கின்றன. ஹிப்ஹாப் ஆதியின் ‘பி.டி.சார்’ திரைப்படமும் அப்படியான ஒன்றுதான். அதன் மையக்கதை உருவாக்க முயன்ற செய்தியையும் அது சினிமாவாக்கப்பட்ட செய்நேர்த்தியையும் புறந்தள்ளிவிட முடியாது. தமிழ் சினிமாவின் இரண்டாம் மூன்றாம் அடுக்கு நாயக பிம்பங்களுக்கான சந்தை நிலவரத்தின்படி எடுக்கப்படுகின்ற படங்களாக அவை இருக்கலாம்.
‘மெய்யழகன்’ திரைப்படத்தில் கார்த்தி, அர்விந்த்சாமி என இரண்டு நாயகர்கள் இருக்கிறார்கள். முன்னதாக ‘96’ என்கிற வெற்றிப் படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்திருக்கிற இயக்குநர் பிரேம் குமாருக்கு இரண்டாவது படம். இருபத்திநாலு மணிநேரத்திற்குள் ஓர் அசலான வாழ்வினை அடையாளங்கண்டு கொள்ளுவதற்கு கதையின் நாயகன் மெய்யழகனுக்கு தவிர்க்கமுடியாத ஓர் அசௌகரிய பொழுது வாய்க்கிறது. அது உருவாக்கும் சிறிய சந்தர்ப்பங்களில் தன்னுடைய ஈகோ தாக்கப்பட்டு முற்றிலும் வேறொரு பார்வைக்கோணத்தை அடையும்போது அவனுக்குள்ளே ஏற்படுகிற மாற்றத்தை திரையில் இன்ச் இன்ச்சாக நாம் காண்கிறோம். மனித உறவுநிலைகளில் அருகிவிட்ட உறவுமுறைகளின் முக்கியத்துவத்தை நெகிழ்வோடும் நிதானமாகவும் கடத்துகிறது இந்தப் படம். அதுவே இயக்குநரின் கதை சொல்லும் பாணியின் ஸ்பெஷாலிட்டியாகவும் இருக்கிறது.
பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் வெளியான ‘கொட்டுக்காளி’ திரைப்படமும் ஒரு குறிப்பிட்ட காலப்பொழுதிற்குள்ளே நடக்கிற சம்பவக்கோர்வையை காட்டியிருக்கிறது. இயக்குநர் ஒரு சிறுகதையை திரைக்கதையாகியுள்ளார் எனலாம். இதுவும் சாதிய பிரச்சனையைத்தான் கையில் எடுத்திருக்கிறது. முன்னதாக அவருடைய ‘கூழாங்கல்’ திரைப்படத்திலிருந்த அதே பாணியை இதிலும் கையாண்டிருக்கிறார். சினிமாவின் Real Time-ஐ பழகிய பார்வையாளனுக்கான திரைப்படங்கள்தான் அவருடையது. இதில், சூரி நடித்திருப்பதாலும் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருப்பதாலும் ஒரு முகாந்திரம் கிடைத்திருந்தது. ஆனால், அதிக நாட்கள் திரையரங்கில் நீடிக்கவில்லை. முன்னதாக உலகத்திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட கொட்டுக்காளியின் பார்வையாளர்கள் வேறுபட்டவர்களாக இருக்கக்கூடும்.
பாரி இளவழகன் எழுதி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘ஜமா’. அவருடைய முதல் படம். திருவண்ணாமலை வட்டாரத்திலுள்ள ஓர் ஊரில் கூத்து கட்டும் கலைஞர்களின் வாழ்க்கைப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட திரைக்கதை. சரியாக சொல்லுவதென்றால் இரண்டு நண்பர்களின் கதை. அது அடுத்த சந்ததியை எப்படி பாதித்துவிடுகிறது என்பதையும் மெய்யான கலைஞனின் குணம் வேறு, சாதாரண மனிதனின் குணம் வேறு என்கிற வித்தியாசத்தையும் அடையாளப்படுத்துகிற கதையில் கதாபாத்திரங்களை வார்த்தெடுத்திருக்கும் விதத்தில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகர் சேத்தனைத் தவிர்த்து ஒன்றிரண்டு முகங்கள் மட்டுமே சினிமாவில் நாம் ஏற்கனவே அறிந்த முகங்கள். ஆனால், வெகுஜனத்திற்கான கச்சிதமான Cinema Craft இதில் உள்ளது. இளையராஜாவின் இசை உள்ளது. ஆனாலும் படம் திரையரங்கில் வெகுநாள் நீடிக்கவில்லை. பேச்சுவழியாக பரவலாக எல்லோரையும் எட்டும்போது வெளியேறிவிட்டது.
‘போகுமிடம் வெகுதூரமில்லை’ ஒரு Road Movie. இயக்குநர் மைக்கேல் கே.ராஜா. கதை நாயகனின் தேவை என்ன? அவனுடைய இக்கட்டான நிலையில் இருக்கிற சிக்கல் என்ன? என்கிற தெளிவோடு தொடங்குகிற கதை அசந்தர்ப்பமாக எதிர்கொள்கிற சம்பவங்களும் குழப்பங்களும் இறுதி தீர்வும்தான் அதன் ஒருவரி செய்தி. மார்ச்சுவரி வண்டியில் ஓர் இறந்த உடலை சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இறந்துபோனவர் ஊரில் பெரிய மனிதர். எஞ்சின் கோளாறுள்ள அவ்வண்டியில் பயணத்தை தொடங்குகிற கதையின் நாயகன் போகிற வழியில் ஒரு கூத்துக்கலைஞனுக்கு வேண்டா வெறுப்பாக லிஃபட் கொடுக்கிறான். வழியில் பிரேதம் தொலைந்துவிடுகிறது. இந்த நிலைமையை கதாநாயகனும் கூத்துக்கலைஞனும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது மிச்ச கதை. நடிகர் விமலும் கருணாஸூம் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்கிற கொக்கி அதன் திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறது.
சம்யுக்தா விஜயன் எழுதி இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ‘நீல நிறச் சூரியன்’. திருநர்களின் வாழ்வின் ஒரு பகுதியை அழுத்தமாகச் சொல்ல முயன்றிருக்கிறது. அரவிந்த் பானுவாக பொதுசமூகத்தில் வெளிப்பட முடியாமல் தவிக்கின்ற உளவியல் போராட்டமும் வெளிப்பட தயங்குகிற அச்சமும் கூச்சமுள்ள சிக்கலை கையாண்டுள்ளது. பின்னர், பானுவாக உருமாற்றம் அடைந்ததும் எதிர்கொள்ள நேர்கிற ஒவ்வொரு சம்பவமும் திருநர்களின் எதார்த்த பிரச்சனைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதற்கான காட்சிகள் சுமந்திருக்கும் உணர்வுநிலைகளை பார்வையாளர்களாக உட்கார்ந்திருந்து அவதானிப்பதில் சௌகரியங்கள் இருப்பதில்லை. முன்தீர்மானத்தில் அடம்பிடிக்கிற சமூகமாக நாம் இருக்கின்ற வரையில் மாற்றங்களுக்கான குறைந்தபட்ச எத்தனிப்பையும் மைனாரிட்டி அளவிலேயே மெச்சிக்கொள்கிறோம். அது போதாது.
போலவே, இயக்குநர் திவ்யபாரதியின் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ‘ஜில்லு’. அதுவும் திருநர்களின் வாழ்வையும் அதில் நிலவுகிற அவலங்களையும் அருகே சென்று படம்பிடித்துக் காட்டியுள்ளது. இதிலுள்ளவை நம் பொதுபுத்தியில் ஏற்கனவே தகவலறிவாக பரவியுள்ளது. நிறைய செய்திகளையும் கேள்விப்பட்டிருப்போம் நேரிலும் பலவற்றை பார்த்திருப்போம். எதனால் அவர்கள் பாலின அடையாளத் தவிப்போடு முறையாக அங்கீகரிக்கப்படாமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள். பிறந்த வீடு ஒதுக்கித் தள்ளுவதிலிருந்து தொடங்குகின்ற பிரச்சனைத்தான் சமூகத்தின் மூர்க்கமான இண்டு இடுக்குகள் வரை அவர்களை ஒடுக்கி வைத்து நெருக்குகிறது. நீல நிறச் சூரியனில் குறைந்தபட்ச பாதுகாப்பும் வசதியும் உள்ள அரவிந்த் பானுவாக வெளிப்படுவதில் உள்ள உளவியல் சிக்கல்களின் தொடர்ச்சியில் இருக்கிற அப்பாதுகாப்பு வரிசை சீர்க்கெட்டால் ஜில்லுவாகி தெருவில் தள்ளப்படுகிற நிலை எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற அபாயம் உள்ளது. அதில் பானு, தன்னை திருநர் என்கிற அடையாளத்திற்குள் திணித்துக்கொள்ள விரும்பவில்லை. தன்னை ஒரு பெண் என்று அடையாளப்படுத்திக்கொள்ள போராடுகிறார். இந்த இரண்டு படங்களிலும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்துகொள்ள நாம் மெனக்கிட வேண்டும்.
முப்பது ஆண்டுகளுக்கும் முன்னர், ஆனந்தவிகடன் பத்திரிகையில் எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய ‘வாடா மல்லி’ என்ற தொடர்கதை வெளியானது. முதன்முதலாக திருநங்கைகளின் பிரச்சனைகளை மட்டுமல்ல அதிலுள்ள உளவியல் கூறுகளையும் அப்போதுதான் அறிந்துகொண்டேன்.
நீல நிறச் சூரியன் படத்தை திரையரங்கில் பார்த்தபோது என்னையும் சேர்த்து இருபது பார்வையாளர்கள்தான் இருந்தோம். அதில் ஓர் இளைஞர் பட்டாளம் இருந்தது. ஆண்களும் பெண்களுமான கல்லூரி மாணவர்கள். படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே அவர்களிடமிருந்து சலிப்பான கமெண்ட்டுகளும் கேலி சிரிப்புகளும் வந்துகொண்டே இருந்தது. அவர்களில் ஒருத்தனை நம்பி மற்றவர்கள் வந்துவிட்டார்கள் என்பது கமெண்டிலிருந்து புரிந்தது. பிறரைத் தொந்தரவு செய்கிறோம் என்பதையும் கடந்து படத்தில் காட்டப்படும் பிரச்சனைகளுக்கு அவர்கள் ரியாக்ட் பண்ணியதிலிருந்து ஒன்று புரிந்தது. அறிவார்ந்த சமூகம் என்பது மனித நேயம் சம்பந்தப்பட்டது. அது நம்மிடம் முழுமையற்று இருக்கிறது.
சினிமாவிற்கான Who is your audience? என்கிற அடிப்படைக் கேள்வியோடு இதனை சம்பந்தப்படுத்திக் கொண்டேமேயானால் ஓர் அறுதியான முடிவுக்கு நம்மால் ஏன் வரமுடியாமல் போகிறது என்பது புரிந்துவிடும்.
1994-இல் வெளியான திரைப்படம் ‘மகாநதி’. சந்தானபாரதி இயக்கத்தில் கமலஹாசன் நடித்தது. கதைப்படி பிரமாதமான படம். திரைக்கதை, வசனம், படமாக்கிய விதம் என எதிலும் சோடை போகவில்லை. ஆனால் படம் தோல்வியடைந்தது. அதன் பின்னர் சில ஆண்டுகளிலேயே தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டபோதெல்லாம் ஹிட் அடித்தது. இன்று வரை தமிழ் சினிமாவில் அந்தப்படமும் ஒரு மைல் கல். ஆனால், அப்போது ஏன் தோல்வி? அச்சமயம் அத்திரைப்படத்தைப் பற்றி பல சினிமா பிரபலங்கள் பைட்கள் கொடுத்திருந்தார்கள். அதில் ஒன்று இயக்குநர் மணிவண்ணன் சொன்னதின் சாராம்சம் இதுதான். ‘இருக்கற பிரச்சனையில கொஞ்சம் ஜாலியா இருந்துட்டு போவலாம்னு தியேட்டருக்கு வர்றவன், இங்கயும் மனசு தாங்க முடியாத சோகத்தை பார்த்துட்டு கடுப்பாகியிருப்பான்’ என்றார். ஆனால், பின்னர் வீட்டுக்குள்ளேயே வந்துவிட்ட அதே படத்தை அத்தனைக் குடும்பங்களும் ரசித்துப் பார்த்தார்கள்.
இந்த முரணை எப்படி விளங்கிக்கொள்வது? வேறொன்றுமில்லை, எதார்த்த வாழ்வின் பொருளாதார நிலைமை, அன்றாடத்தின் நெருக்கடியுள்ள அல்லது நெருக்கடி குறைந்துள்ள மனோபாவம் பரவலாக பொதுசமூகத்தில் நிலவியிருக்கும்பட்சத்தில் அது இதுபோன்று பிரதிபலிக்கும். அவ்விதமாக சமூகத்தின் மனப்போக்கு மற்றும் திரைக்கதை அம்சங்களின் சமூகப்போக்கு இரண்டுமே அரசியல்மயமாக்கப்படுகின்ற காலச் சூழலுக்கு பங்குள்ளது. நுகரும் பார்வையாளர்களின் வாங்கும் சக்தியினை நம்பி அதன்மீது துணிந்து பணம் கட்டுகிற பாணி தான் Stardom படங்களின் ராஜபாட்டை.
இப்போது ஓடிடி தளங்கள் வீட்டிற்குள்ளே படங்களைக் கொண்டு வந்து சேர்த்துவிடுகிறது. அல்லது திரைக்கு வரத் திணறுகிற படங்களை நேரிடையாக கொண்டு வந்துவிடுகிறது. ஜமா, கொட்டுக்காளி, நந்தன், பேச்சி போன்ற படங்களுக்கான ஊடக கவனப்படுத்தல்களைத் தொடர்ந்து அவற்றுக்கான பார்வையாளர்கள் சர்வநிச்சயமாக வீடுகளில் உண்டு. திரைப்படங்களுக்கான சந்தை வியாபாரங்களின் மீடியங்களும் மாறியிருப்பதால் லாபக் கணக்கை துல்லியமாக கணித்துவிட முடியாது. ஆனால், பார்வையாளர்களை கவனப்படுத்திவிட முடியும். சாமானிய மிடில்கிளாஸ் மனிதனுக்கு பர்ஸூம் பத்திரமாகும்.
இதோ ரிலீஸ் ஆகியிருக்கிற ‘வேட்டையன்’ திரைப்படம் இயக்குநர் த.செ.ஞானவேலுக்கு இரண்டாவது படம். முதல் படமான ‘ஜெய் பீமை’ அடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்திருக்கும் இப்படம் இயக்குநரின் படமாகவும் அடையாளப்பட்டிருப்பதில் சிரத்தையோடு தேர்ந்து எடுத்துக்கொண்டுள்ள சப்ஜெக்டில் அவருக்கு இருக்கும் இலக்கின் முக்கியத்துவம் தெரிகிறது. அது வெகுஜனத்தை குறி வைத்து கல்வி சார்ந்த பிரச்சனைகளின் பின்னுள்ள அரசியலை தொட்டுக் காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல், அமிதாபச்சன் போன்ற ஓர் உச்ச நடிகர் வெறும் கௌரவ வேடமாக அல்லாமல், கதைக்கான மையக்கதாபாத்திரங்களில் ஒருவராக எழுதப்பட்டிருப்பதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
அடுத்ததாக, கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இந்த அக்டோபர் மாத இறுதியில் வெளியாகவிருக்கிற ‘அமரன்’ திரைப்படத்தையும் கதாநாயக பிம்ப வரிசைக் கோட்டின் இருமுனையில் நிறுத்திப் பார்த்துவிடலாம். அது, காலஞ்சென்ற இந்திய இராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான புரொமோஷன் தொடங்கிவிட்டது எனும்போது.. பார்வையாளர்களைத் மனோரீதியாக தயாராக இருக்கும்படி படக்குழு வேண்டுகிறது.
நம்முடைய பரந்துபட்ட பார்வையாளர்களுக்கு நன்கு பழகியுள்ள ஒரு Cinema Craft என்பதோ வெகுஜன ரசனைக்குரியது. அதேவேளை, இயக்குநர் பாலுமகேந்திராவின் ‘வீடு’ ‘சந்தியா ராகம்’ போன்ற திரைப்படங்களை கொண்டாடிய ஒரு சந்ததி நம்மிடம் இருந்தனர் என்பதும் மறுப்பதற்கில்லை. இன்று நம்மில் பலரும், உலகு தழுவிய பல்வேறு பிராந்தியமொழிப் படங்களையும் பார்ப்பவர்களாக ஏற்றுக்கொள்பவர்களாக இருக்கிறோம் என்பதையும் மறுக்க முடியாது.
நாம் உணர்ச்சிகரமான சம்பவங்களின் விளைவான உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கு ஆளாகிறவர்கள். அவற்றை திரையில் கதையாக காணும்போதே நம் தனிப்பட்ட வாழ்வின் ருசியில் உள்ள ஒரு கசப்பையோ இனிப்பையோ அதில் பிரதிபலிப்பதை உணர்ந்துவிட்டோம் என்றால் அன்றைய மனநிலையைப் பொறுத்து அதை ஏற்றுக்கொள்வோம் அல்லது நிராகரித்துவிடுவோம்.











