The Talkie
Thursday, April 9, 2026
  • Login
  • Register
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home கட்டுரைகள் உலகத் திரைப்படங்கள்

ஆஸ்கர் 2025 –  ஒரு பார்வை

The Talkie by The Talkie
March 15, 2025
in உலகத் திரைப்படங்கள், கட்டுரைகள்
A A
0
Share on WhatsappShare on FacebookShare on Twitter
Author Icon அய்யனார் விஸ்வநாத்

பாகம் 01

மார்ச் இரண்டாம் தேதி நடந்து முடிந்திருக்கிறது தொண்ணூற்று ஏழாவது அகதாமி விருது வழங்கும் விழா. இதில் ‘சிறந்த படம்’ பிரிவின் பரிந்துரைப் பட்டியலில் இருக்கும் படங்களைக் குறித்து பறவைப் பார்வையாக சில விஷயங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இந்த வருடத்தில் பெரிய இயக்குநர்களின் படங்கள், வணிக ரீதியிலாக உலகம் முழுவதும் சென்று வெற்றிபெற்ற படங்கள், தொழில்நுட்பப் பின்னணியோடு வரும் பிரம்மாண்டப் படங்கள் பிரதானமாக இல்லை. பரிந்துரையில் இருக்கும் படங்களோடு ஒப்பிடுகையில் Dune இரண்டாம் பாகம் மட்டுமே மிகுந்த பொருட்செலவில் உருவானது. மற்றவை யாவும் கதையம்சம் சார்ந்த படங்களாகத்தான் இருக்கின்றன. இதை ஒரு முக்கியமான மாற்றமாகக் கருதுகிறேன். வணிக நோக்கிலிருந்து கலை நோக்குக்கு ஹாலிவுட் நகர்வதாகவும் வைத்துக் கொள்ளலாம்.

சிறந்த படங்களுக்கான பரிந்துரைப் பட்டியலில் மொத்தம் பத்து படங்கள் உள்ளன. Conclave மற்றும் Anora படங்களுக்கு இடையே வலுவான போட்டி இருக்கும் என யூகிக்க முடிந்தது. Anora படத்திற்கு ‘சிறந்த திரைப்படம்’ உட்பட ஐந்து விருதுகள் கிடைத்திருக்கின்றன. சிறந்த இயக்குநராகவும், திரைக்கதைக்காகவும் இந்தப் படமே பெற்றுக்கொண்டது. ஷான் பேகர் இந்த இரண்டு விருதுகளையும் பெற்றுக்கொண்டார். ஒரு சுயாதீனப் படம் இத்தனை விருதுகளை வென்றது ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது என்றும் சொல்லலாம். இவை ஆஸ்கருக்கு பட்டியலில் உள்ள படங்கள். படத்தின் பெயரையும் தயாரித்த நிறுவனத்தின் பெயரை அடைப்புக் குறிக்குள்ளும் வாசிக்கலாம்.

Anora (Neon)

The Brutalist (A24)

A Complete Unknown (Searchlight Pictures)

Conclave (Focus Features)

Dune: Part Two (Warner Bros.)

Emilia Pérez (Netflix)

I’m Still Here (Sony Pictures Classics)

Nickel Boys (Amazon MGM Studios)

The Substance (Mubi)

Wicked (Universal Pictures)

Conclave

நாவலாசிரியர் ராபர்ட் ஹாரிஸ் எழுதி 2016 ஆம் ஆண்டு வெளிவந்த Conclave நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் கிடைத்திருக்கிறது. திரைக்கதையாசிரியர் பீட்டர் ஸ்ட்ராகன் பெற்றுக்கொண்டார். மிகச் சிறந்த அரசியல் படமாக வந்திருக்கிறது. கிறிஸ்துவம் ஏற்றுக் கொள்ளாது  எனச் சொல்லப்பட்ட அல்லது நம்பப்பட்ட ஒன்றை மிக அழுத்தமாக முன் வைப்பதால் நிறைய எதிர்ப்புகளையும் சலசலப்புகளையும் இந்தத் திரைப்படமும் நாவலும் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் கிறிஸ்துவ மத அமைப்புகளைப் பொருத்தவரை இந்த எதிர்ப்பையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு. நான் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதுதான் எல்லா மத அமைப்புகளும் கடவுளுக்கு எதிரானவை. மதகுருமார்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அதிகார வலைப்பின்னல்களுக்கும மட்டுமே மதம் ஆதரவாகச் செயல்படும். மக்களுக்கும் இவற்றால் ஒரு பயனும் இல்லை. ஆனால் உலகின் மிக செல்வாக்கு மிகுந்த கத்தோலிக்க மத அமைப்புக்குள் என்ன நடக்கிறது என்கிற ரகசிய குறுகுறுப்பு மட்டும் நம் அனைவருக்குமே உள்ளதுதான்.

மதக் கட்டமைப்புகள் உருவாக்கி வைத்திருக்கும் ரகசிய அடுக்குகள், ஒழுங்குகள், பெயரளவுக்கான கட்டுப்பாடுகள் போன்றவை “அங்கே என்ன புகைகிறது?” என்கிற எதிர்பார்ப்பை மக்களிடையே ஏற்படுத்தி மக்களை மதத்தின் கட்டுக்குள்ளேயே வைத்திருக்க ஏற்படுத்தப்பட்டவைதாம். இயல்பாக ரகசியங்களின் மீது மக்களுக்கு மட்டுமல்ல படைப்பாளிக்குகளுக்கும் ஆர்வம் அதிகம். எனவேதான் சில நூறு படைப்புகளாவது கத்தோலிக்க மத அமைப்பையொட்டி எழுதப்பட்டிருக்கும். கிறிஸ்துவத்தை ஒட்டிய ஏராளமான ரகசியத் தியரிகளும் உண்டு. இந்த உண்மையான வதந்திகளை வெற்றிகரமான விற்பனைப் பிரதிகளாக மாற்றிய நிறைய  எழுத்தாளர்களில் டான் ப்ரவுன் முக்கியமானவர். அவரின் பரபரப்பான பல நாவல்கள் கிறிஸ்துவக் குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டவை.

வாடிகன் சுவர்களுக்குப் பின்னே என்ன நடக்கிறது என்கிற கதைக் களம் உலகம் முழுவதும் விற்பனையாகக் கூடியது. Angels & Demons, the DaVinci Code, Inferno போன்ற பல நாவல்கள் திரைப்படமாகவும் வந்து பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. வழக்கமான மசாலா மற்றும் எளிய பரபரப்பை முதன்மையாகக் கொண்ட படைப்புகள் என்பதால் யாருக்கும் பெரிய புகார்கள் கிடையாது. இது போன்ற நாவல்களுக்கும் திரைப்படங்களுக்கும் உடனடி புகழும் கிடைக்கும். ஆனால் Conclave சற்று ஆழமாக இந்த “ஹோலி ஸ்மோக்” ஐ குறித்துப் பேசுகிறது.

கவிஞர் ஹெச். ஜி. ரசூலின் மிகப் புகழ்பெற்ற கவிதை  அவரை ஊர் விலக்கம் செய்ய வைத்தது

அந்த  மூன்று வரிக் கவிதையான

‘ஆயிரம் நபிமார்கள் இருந்தும்

ஏனில்லை வாப்பா

ஒரு பெண் நபி’?

என்பதும் Conclave முன்வைக்கும் ஒரு முக்கியகே கேள்வி அல்லது கருத்தாக்கம். இந்த வகையில் இந்தப் படைப்பு புதிய மாற்றங்களைக் குறித்தும் ஆழமான தேவையை முன்வைக்கிறது.

ஒரு காட்சியில், இறந்து போன முதன்மை போப் நியமித்திருந்த ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் எவரும் அறிந்திராத பாதிரியார், தன்னுடைய உணவுப் பிரார்த்தனையில் தாங்கள் உண்ணும் உணவுக்கு கடவுளுக்கு நன்றி கூறுவதோடு அதைச் சமைத்துத் தந்த ஆனால் சேர்ந்து உணவருந்த முடியாத சகோதரிகளுக்கும். கன்னியாஸ்திரிகளுக்கும் நன்றி சொல்கிறார். படத்தின் மையம் இதுதான். இதைச் சுற்றி சிறப்பானதொரு பரபரப்பான நிகழ்வை எழுதியிருக்கிறார்கள். சரியாக வந்திருக்கிறது.

வாடிகன் போப் காலமானால் அவரிடத்திற்கு புதியத் தலைமைப் பாதிரியாரை தேர்ந்தெடுக்கும் சிக்கலான வேலை கார்டினல் கல்லூரியின் மதகுரு பொறுப்பில் இருப்பவரின் கீழ் வரும். படத்தில் வரும் மதகுரு  தாமஸ் லாரன்ஸ் கதாபாத்திரம் மிகுந்த மனிதாபிமானமும் நேர்மையும் கொண்டதாக வார்க்கப்பட்டிருக்கிறது.  இந்தக் கதாபாத்திரத்தை Fiennes ஏற்று நடித்திருக்கிறார். இந்நிகழ்வுக்கு உலகம் முழுவதும் போப்பினால் நியமிக்கப்பட்ட கார்டினல்கள் வரவழைக்கப்படுவார்கள்.  அவர்கள் ரோமுக்குள் இருக்கும் பீட்டர்ஸ் சர்ச் வளாகத்திற்கு வந்தபிறகு அவர்களின் அத்தனை வெளியுலக தொடர்புகளும் துண்டிக்கப்படும். தினசரி நிகழும் வாக்கெடுப்பில் எந்த பாதிரியாருக்கு மெஜாரிட்டி (119 இல் 82 ) வாக்குகள் கிடைக்கிறதோ அவரே அடுத்த தலைமை போப். அது கிடைக்கும் வரை திரும்பத் திரும்ப வாக்கெடுப்பு நடக்கும். வாரங்கள் மாதங்கள் எனவும் இந்நிகழ்வு நீள்வது உண்டு. தோல்வியடைந்த வாக்கெடுப்பு சீட்டுகள் அங்கிருக்கும் அடுப்பில் எரிக்கப்படும். அதன் புகை சிம்னியில் வெளியேறுவதை “ஹோலி ஸ்மோக்” என்கிறார்கள். புகையின் நிறத்திற்கேற்ப வாக்கெடுப்பு வெற்றிபெற்றதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

ஆசையோ, வேட்கையோ இல்லாதிருக்க வேண்டிய பிரம்மச்சாரி பாதிரிமார்களின் அதிகார வெறியும், பலவீனங்களும், போட்டிகளும் இந்நிகழ்வில் அப்பட்டமாக வெளிப்படுகின்றன. சாமியார்களின் லீலை நாம் அறிந்தது தானே என்பதால் இவற்றில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் இந்த நிகழ்வு எப்படி வலுவான மனிதத்திற்கு நகர்கிறது என்பதுதான் இத்திரைப்படத்தில் நிகழ்ந்திருக்கும் அற்புதம். இம்மாற்றம் நடைமுறையிலும் அரங்கேறினால் மத அமைப்புகள் மீது நமக்கிருக்கும் விமர்சனங்கள் குறைய வாய்ப்புண்டு.

Anora

Anora


Anora எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கதையும் தமிழ்சமூகத்திற்கு நெருக்கமானதுதான். தமிழ் சினிமாவில் தேய்வழக்கான காதலுக்கு எதிர்ப்பாக அமையும் ஏழை பணக்கார வர்க்கப் பிரச்சினைதான் அனோராவின் கதைக் களமும். ஆனால் காட்சிப்படுத்தலில் பயங்கரத்தைக் கூட்டியிருக்கிறார்கள். அப்பட்டமான மிக வெளிப்படையான உடற்காட்சிகள் முதிர்வான பார்வையாளருக்கு உகந்தது. சென்ற வருடம் வெளிவந்து பல விருதுகளை குவித்த  Emma stone  நடித்திருந்த Poor Things  படத்தை அனோராவுக்கு இணை வைக்க முடியும். பாலியல் விடுதிகளையும் பெண்களையும் மிக நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கூடவே உடற்தொழிலின் அபத்தங்களையும் முரண்களையும் பிற பெண்களின் வழியாகவும் திரைப்படம் முன் வைக்கிறது.

இயக்குநர் ஷான் பேக்கர் இந்த தளத்தைக் கையாள்வதில் தேர்ந்தவர். அமெரிக்காவின் இன்னொரு முகத்தை, விளிம்புநிலை வாழ்வை தொடர்ந்து அழுத்தமாக தம் படங்களில் முன் வைக்கிறார். The Florida Project, Tangerine ஆகிய இரண்டு படங்களும் அனோராவின் கதைக்களத்தை ஒட்டியவைதாம். இந்த மூன்று படங்களையுமே ட்ரிலாஜி என வகைப்படுத்தலாம்தான். ஷான் மற்றும் ஹாலிவுட் விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை.

அனோரா உருவாக்கும் மன உணர்வுகள் கொந்தளிப்பானவை. பாலியல் அப்பட்டமும், போதையும், உச்சமும், கொண்டாட்டமும் தரும் கிளர்வான மனநிலை சடுதியில் அபத்தமாகவும் துக்கமாகவும் மாறிப்போகிறது. யாரிடமும் – குறிப்பாக நாயகனை கொண்டு போக வரும் அடியாட்களிடம் கூட வெறுப்பு இல்லை. எல்லோரிடமும் பதற்றமான பொறுப்புணர்வு இருக்கிறது. அந்தப் பொறுப்புணர்வும், குளிர்ந்த நியூயார்க் நகரத்தின் அலைச்சல்களும், அனோராவின் துக்கமும்-அதிர்ச்சியுமான நிலையும், போகப்போக நகைச்சுவையாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இது எல்லாமே அபத்தம் என்பதாக அனோராவுடன் நாமும் ஒரு முடிவுக்கு வருகிறோம். அந்த ஏமாற்றத்தையும் துக்கத்தையும் இறுதிக் காட்சி ஆழமாகப் பழிவாங்கி சமன் செய்கிறது.

அனோராவாக நடித்திருக்கும் Mikey Madison உயிரோட்டமான பங்களிப்பை நல்கியிருக்கிறார். பாலியல் சார்ந்த கதைக் களத்தில் நடிக்கும்போது இந்த எல்லை வரை செல்ல முடியுமா என நான் எம்மா ஸ்டோனைக் கண்டு வியந்ததுண்டு. அதை மைக்கி மேடிசன் ஒரு படி தாண்டியிருக்கிறார்.

படத்தின் முதல் முப்பது நிமிடங்கள் அவ்வளவு அசமந்தமாக நகர்கின்றன.  மதுவிடுதிக் காட்சிகள், பாலியல் விழைவுகள், என எல்லாமும் பல அமெரிக்க ஐரோப்பியப் படங்களில் பார்த்துச் சலித்தவைதாம். ஆனால் அரை மணி நேரம் கடந்த பிறகு எழும் உணர்ச்சி மயம் அல்லது பைத்தியக்காரத்தனம் கடைசி வரை நீடிக்கிறது.

பாலியல் விடுதியில் பணிபுரியும் அனோராவுக்கும் ரஷ்யப் பணக்காரப் பின்புலத்தைச் சேர்ந்த அவளைவிட இரண்டு வயது குறைந்த இளைஞனுக்கும் இடையே உருவாகும் கவர்ச்சியும் இணக்கமும் விலக்கமும்தான் இந்தப் படம். கூடவே உண்மையான காதல்  என்றால் என்ன என்பது பற்றிய கேள்வியையும் உடன் எழுப்புகிறது. உண்மையில் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காத சக மனிதரின் மீதான சிறியதான அக்கறைக்குதான் காதல் என்று பெயர். மற்றவைகள் யாவும் மற்றமைகளே.  இதை கதையின் நாயகி படத்தின் இறுதிக் காட்சியில் மிகவும் அழுத்தமாக நமக்குச் சொல்கிறார்.

வழக்கமான திருமண பந்தத்தில் எந்த ஆசையோ கனவுகளோ இல்லாத ஒரு பெண்ணைப் பேசிப் பேசிக் கிளர்த்தி, அவளுக்கு பணக்கார வாழ்வின் பரவசங்களை பருகக் கொடுத்து, முறைப்படி சர்ச்சில் வைத்து திருமணமும் செய்து கொண்டு, கடைசியில் அதிகாரம் மிக்க அம்மா திட்டுகிறார் என ஓடிப்போகும் பணக்காரப் பையன் சமகால தமிழ் ஆண்களையும் நினைவூட்டுகிறான். இவான் உருட்டும் பல பிக்-அப் லைன்கள் நமக்கு சொந்தமானவை. திருமணம் என்கிற அமைப்பும் அதையொட்டிய சட்டதிட்டங்களும் அதை இல்லாமல் ஆக்க இருக்கும் வழிமுறைகளும் கேலிக்கூத்தாக முடிகின்றன. கடைசியில் நாயகனின் கோழைத்தனத்தைப் பார்த்து எரிச்சலும் கோபமும் அடையும் அனோரோ திருமண பந்தத்தை முறிக்க சம்மதிக்கிறாள். மீண்டும் எங்கிருந்து வந்தாளோ அதே இடத்துக்கு நகர்கிறாள்.

நாயகி மட்டுமல்ல நாமும் ரோலர்-கோஸ்டர் அனுபவத்திற்குள் சென்று மீள்கிறோம். ஷான் பேக்கரின் நாயகிகளில் அனோரா மகுடமாக இருப்பாள்.

THE SUBSTANCE

‘ஹாரர்’ படங்கள் என் ரசனைக்குப் பொருந்தி வருவதில்லை. குறிப்பிட்ட வெகு சில படங்களைத் தாண்டி இந்த வகைமைப் படங்கள் என்னை ஈர்த்ததும் இல்லை. மான்ஸ்டர், பேய், ரத்தக்காட்டேரி, சைக்கோ வகைமை என ஹாரர் படங்களிலேயே பல உட்பிரிவுகள் உள்ளன. THE SUBSTANCE நவீனமாகவும், ஓர் அறிவியல் புனைக் கதை போலவும் இருந்ததால். முழுமையாகப் பார்க்க முடிந்தது. அருவருப்பு சுவையே படம் கடத்தும் முதன்மையான உணர்வு. இதைப் படம் நெடுக உணரும் வகையில் ஏராளமான காட்சிகள் வைத்திருக்கிறார்கள். உடலின் அழகு, குரூரம் என்கிற இரண்டு நிலைகளைக் குறித்த தத்துவார்த்த பார்வைகளும் ஸ்தூலமாக உண்டு. ஆனால் இதற்குள் முழுமையாகப் போக பல மேலோட்டமான விஷயங்களை சகித்தும், கடந்தும் வர வேண்டியிருக்கிறது.

டெமி மூர் முதன்மையாக உடலையும் கிட்டத்தட்ட உயிரையும் கொடுத்து நடித்திருக்கிறார். இவருக்குசிறந்த நடிகைக்கான விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கிடைக்கவில்லை. அதற்கு காரணம் அவர் நன்றாக நடித்திருந்தபோதிலும், படத்தை ரசிக்க முடியவில்லை. எப்போது முடியும் என்கிற மனநிலைதான் இருந்தது. டெமிமூரோடு மார்கரெட் குவாலி யும் அதிர்ச்சியூட்டும் நடிப்பை வழங்கியிருக்கிறார். படத்தில் ஒளிரும் இளமையைக் குறிப்பிட இவரைத் தேர்வு செய்திருக்கிறார்கள். இரண்டு நடிகைகளின் தேர்வுமே கதைக்கு சரியான பலமாக அமைந்திருக்கிறது.

சென்ற வருட கான் திரைப்பட விழாவில் இந்தப் படம் சிறந்த திரைக்கதைக்காக விருது பெற்றிருக்கிறது. பிரெஞ்சு இயக்குநர் Coralie Fargeat க்கு இது இரண்டாவது படம். அவரது முதல் படமான Revenge நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. புகழின் உச்சத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் மன உணர்வையும், காலப்போக்கில் அழகு மற்றும் மெல்லத் தேயும் புகழையும் தக்க வைத்துக் கொள்ள அவள் எதிர் கொள்ளும் மனப் போராட்டங்களையும் இயக்குநர் துல்லியமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

பெண்ணுடலை காட்சிப் பொருளாகத் துய்க்கும் அனைத்து விளம்பர மற்றும் ஃபிட்னஸ் துறைகளின் அபத்தமும் அதில் கொட்டும் பணமும், பெண்ணுடலின் மீது அவைகள் செலுத்தும் ஆதிக்கமும் ஊடுபாவாகப் படத்தில் சொல்லப்படுகிறது. படத்தின் இறுதிக் காட்சி இந்த ஒட்டு மொத்த துறையையும் அருவருப்பில் குளிப்பாட்டி விடுகிறது. ஹாரர் படமாக இருந்தாலும் இந்த அவல நகைச்சுவை கொண்ட கருப்பொருள்தான் இந்தப் படத்தை சிறந்த இடத்திற்கு நகர்த்துகிறது.

இருப்பினும் சிறந்த திரைக்கதை எனும் வகைமையில் இந்தப் படம் கான் விருது பெற்றது வியப்பாகத்தான் இருக்கிறது. கான் விருதுகள் இந்த முறை கண்ணை மூடிக்கொண்டு வழங்கப்பட்டிருக்கின்றனவோ என்கிற சந்தேகமும் எழுகிறது. கிட்டத்தட்ட இருபது வருடங்களாக கான் விருதை தொடர்ந்து கவனிக்கிறேன். இந்த முறை வழங்கப்பட்ட பல விருதுகள் அபத்தமானவைதாம்.

எண்பதுகளிலிருந்து ஹாலிவுட்டில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் டெமி மூருக்கு இப்போது வயது அறுபத்து மூன்று. ஆனால் வயதை புறந்தள்ளும் கச்சித உடலும் நடிப்பும் வாய்க்கப் பெற்றிருக்கிறார். ஆஸ்கர் சிறந்த நடிகைப் பிரிவில் இந்தப் படத்திற்காக டெமிமூரும், அனோரா படத்திற்காக மைக்கியும் இடம் பெற்றிருக்கிறார்கள். வலுவான போட்டிதான். இருவரில் யாருக்கு கிடைத்தாலும் சரியான தேர்வாகத்தான் இருக்க முடியும். அதிர்ஷ்டம் யாருக்கு எனப் பார்ப்போம்.

THE BRUTALIST

THE BRUTALIST

இந்தப் படம் மூன்று மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடுகின்றது. திரையரங்குகளில் பதினைந்து நிமிட இடைவேளையும் சேர்க்கப்பட்டு மூன்று மணி நேரம் முப்பத்தைந்து நிமிடங்கள். 1950 களில் ரோட்ஷோ படங்களில் இத்தகைய இடைவேளை இணைப்பு உண்டு. படத்தின் காலகட்டம் 50 கள் என்பதால் இயக்குநர் அந்த நுட்பத்தையும் சேர்த்திருக்கிறார்.

BRUTALIST தீவிரத்தன்மையும் ஆழமும் மிக்கதொரு படைப்பு. இயக்குநர்  Brady Corbet இன் “மாஸ்டர் பீஸ்” இதுவேதான். நடிகர் Adrien Brody யை மறந்திருக்க மாட்டோம். ரோமன் போலன்ஸ்கியின் அற்புதமான க்ளாசிக்குகளில் ஒன்றான “பியானிஸ்ட்” படத்தில் வரும் பியானிஸ்ட் இவர்தான். இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததிற்காக மிக இளம் வயதில் ஆஸ்கர் விருதை வென்ற பெருமையையும் சேர்த்துப் பெற்றார். இந்த வருடம் BRUTALIST படத்திற்காக சிறந்த நடிகர் விருதைமீண்டும் பெற்றுக்கிறார் . László Tóth எனும் ஹங்கேரிய-யூதர் கதாபாத்திரத்தை நிஜமாகவே திரையில் கொண்டு வந்திருக்கிறார். சிறந்த துணைக் கதாபாத்திரத்திற்கான ஆஸ்கர் விருதினை ஹாரிசனாக நடித்த கய் பியர்ஸ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசைக்கான விருதும், கலை இயக்கத்திற்கான விருதும் இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கின்றன.

ஹிட்லரின் யூத இன அழிப்பில் தப்பிப் பிழைத்த கட்டிடக் கலை நிபுணரான லாஸ்லோ அமெரிக்கா வந்து சேர்கிறார். அவரது மனைவி ஐரோப்பாவில் சிக்கிக் கொள்ள இவர் தனியாக வந்து உறவினர் ஒருவரின் பராமரிப்பில் தங்குகிறார்.  இவரது திறமைகளை பயன்படுத்திக் கொள்வதில் முனைப்பு காண்பிக்கும் உறவினர் ஒரு சிக்கலுக்குப் பின் கைவிடுகிறார். பின்பு லாஸ்லோவின் மேதமையை புரிந்து கொள்ளும் பணக்கார தொழிலதிபர் ஹாரிசன், அவரை வைத்து புதிதாக ஒரு சமூக மையத்தை உருவாக்க விரும்புகிறார்.

அடுக்கடுக்காகப் பல கதைகள் விரிகின்றன. லாஸ்லோ மனைவியின் அமெரிக்க வருகை இன்னொரு திறப்பாக அமைகிறது. அவரது மனைவியின் தனிப்பட்ட ஆளுமையும், உடல் நசிவும், மனிதர்கள் மீது அவளுக்கு இருக்கும் கருணையும் அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. லாஸ்லோ உச்சத்துக்கும் வீழ்ச்சிக்கும் இடையே கிடந்து உழல்கிறான். கூடவே அவனது ஹெராயின் பழக்கம். தான் சார்ந்த துறையில் அவனுக்கு இருக்கும் மேதமை, அது பிறரால் பாதிப்படையும்போது மீண்டும் மீண்டும் காணாமல் போய் பிறகு மீள்வதென இந்தக் கதாபாத்திரம் மட்டுமே மிகச் சிறந்த இலக்கியப் பிரதியாக மிளிர்கிறது.

போரினால் பெரும் செல்வம் சேர்த்த ஹாரிசனின் வாழ்வும், மிடுக்கும், கம்பீரமும் மனிதர்களை அவர் பயன்படுத்திக் கொள்ளும் விதமும் படத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அவரின் அசல் முகம் கோரமாக வெளிப்படுகிறது அதனால் பாதிக்கப்படுபவனும் லாஸ்லோ தான்.

திரைப்படம் முழுவதும், பிரேடி கோர்பெட் நேரடியாகவும் மறைமுகமாகவும் வரலாற்று நிகழ்வுகளையும் கோட்பாடுகளையும் பிரதிபலிக்கிறார். லாஸ்லோ, பௌஹாஸ் கலைப் பள்ளியில் பயின்றவர். இந்த ஜெர்மானிய கலை நிறுவனத்தின் முக்கிய நோக்கமே  எந்தவொரு கட்ட வடிவமைப்பும்  மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப உருவாக வேண்டும் என்பதாக இருந்தது. பிறகு நாஜிக்களால் இழுத்து மூடப்பட்டது. லாஸ்லோ மக்களின் பயன்பாடு என்கிற கோட்பாட்டைப் படம் நெடுகச் சொல்கிறார்.

1950 களின் காலகட்டம் மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வரப்பெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளின் சரித்திரமாகவும் இந்தப் படம் விரிகிறது. கட்டடக் கலையும், உள்வடிவமைப்பும் சார்ந்த துறையில் இயங்குவதால் என்னால் முழுமையாகப் படத்தின் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களோடு கரைந்து போக முடிந்தது. இத்தாலியின் புகழ்பெற்ற மார்பிள் வகையான கரேராவை வாங்கச் செல்லும் பகுதிகள் பெரிய உவப்பைத் தந்தன.

நுட்பமான கலைக்குறிப்புடன் கூடிய, நுணுக்கமான காட்சிகள் நிறைந்த திரைப்படமாக வந்திருக்கிறது. கூடவே மிக ஆடம்பரமான வெளிப்புறக் காட்சிகளும் சன்னமான உளவியல் நிகழ்வுகளும் ஒன்றாக இணையும் அற்புதமும் நிகழ்ந்தேறியிருக்கிறது.

படம் பார்த்து முடித்த பின்னரும் அதன் பாதிப்பு ஓரிரு நாட்கள் வரை இருந்து கொண்டிருந்தது. பிறகு யார் இந்த லாஸ்லோ என இணையத்தில் தேடிப் பார்த்தபோது ஒரே நேரத்தில் வியப்பும் ஏமாற்றமும் அடைந்தேன். இதைப்போன்ற ஓர் அனுபவம் முன்னரே உண்டு. பல வருடங்களுக்கு முன்னர் ஜெயமோகன் எழுதிய ஒரு கதையை வாசித்துவிட்டு அந்தக் கதாபாத்திரத்தை இணையத்தில் தேடியிருக்கிறேன். பின்புதாம் அது புனைவு எனத் தெரியவந்தது.

உண்மைக்கும் புனைவுக்கும் இடையிலான மெல்லிய  கோட்டை அழிக்கப் பெரும் கலையாளுமை வேண்டும். எழுத்தில் சாத்தியமாவது என்பது வேறு. ஆனால் திரைப்படம் போன்ற ஒரு கூட்டுப் பங்களிப்பில் இந்தக் கோடு அழிந்திருப்பது அசாத்தியமானதுதான். THE BRUTALIST படத்தின் மொத்த குழுவினரும் இதை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆஸ்கரில் இடம் பெற்ற படங்கள் குறித்து அடுத்த இதழில் தொடரும்…

Author Image

அய்யனார் விஸ்வநாத்

அய்யனார் விஸ்வநாத் – எழுத்தாளர். இவருடைய ‘ஓரிதழ் பூ’ , ‘பழி’ நாவல்கள் கவனம் பெற்றவை. கட்டடக்கலை சார்ந்த பணியில் இருக்கிறார். சினிமா குறித்து தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறார்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் - 01

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Irunda-Pakkam

தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள்: திரைப்படங்கள் சொல்லும் உண்மை.

March 16, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026
table top-3

டேபிள் டாப் 03

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
trend-kottaiye-11

ட்ரெண்டு கொட்டாய் 11 -நான் (திரை) காவிய நாயகன்

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Google
OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Sign Up
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?